மருத்துவக் காப்பீட்டு பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி, அதன் நன்மைகள் என்ன, மாற்றும் போது கவனிக்க வேண்டியவை என்ன என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சளி, காய்ச்சல் முதல் பெரிய சிகிச்சைகள் வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. இதனால் மருத்துவக் காப்பீடு என்பது அவசரகாலத்தில் நம்மை நிதிநெருக்கடியில் இருந்து காக்கும் பாதுகாப்புச் சுவர் போன்றது.
பலரும் ஒரே காப்பீட்டு நிறுவனத்துடன் நீண்ட காலம் பாலிசியை தொடர்கிறார்கள். ஆனால், சேவையில் குறைவு, விருப்பத்திற்கேற்ப பிரீமியம் இல்லாமை, அல்லது மேலும் நன்மைகள் உள்ள வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விருப்பம் ஏற்படலாம். இந்நிலையில், முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது – மருத்துவக் காப்பீட்டினை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியுமா? என்பதுதான்.இந்திய காப்பீட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான (IRDAI) நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, ஒருவருக்கு இருக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். இதை "Insurance Portability" என அழைக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தில் பயனாளி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பல பாதுகாப்பு நடைமுறைகள் விதிக்கப்படுகின்றன. அதாவது, பழைய காப்பீட்டில் நீங்கள் பெற்றிருந்த No Claim Bonus (NCB), காத்திருப்பு காலம் (waiting period) போன்ற முக்கிய அம்சங்களை புதிய காப்பீட்டிலும் தொடர வாய்ப்பு உண்டு.
மாற்றத்தின் நிபந்தனைகள் என்ன?
மாற்ற கோரிக்கையை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். புதிய நிறுவனத்துடன் பாலிசி தொடங்குவதற்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன் மாற்றக் கோரிக்கையை வழங்க வேண்டும். அதற்கு பழைய பாலிசியின் விவரங்கள் அவசியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கான காப்பீட்டு விவரங்களை புதிய நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அதில், பாலிசியின் நகல்கள், க்ளெய்ம் செய்திருந்தால் அதற்கான விவரங்கள், நோக்கல் க்ளெய்ம் போனஸ் சான்றிதழ், மருத்துவ அறிக்கைகள் ஆகியவை அடங்கும். சில சமயங்களில் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தாலும்கூட, வழங்கப்பட்ட விவரங்கள் மூலமாகவே மாற்றம் நடைபெறும்.
புதிய நிறுவனத்தின் அனுமதி:
புதிய நிறுவனம் உங்கள் மருத்துவ நிலை, பழைய க்ளெய்ம் பதிவுகள், ஏற்கனவே உள்ள நோய்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அந்த அடிப்படையில் தான் பாலிசியை ஏற்கும். மாற்றத்தின் போது கீழ்க்காணும் அம்சங்களில் பாதிப்பு இருக்காது:
- நோ க்ளெய்ம் போனஸ் (NCB): க்ளெய்ம் செய்யாத ஆண்டுகளுக்கான பரிசாகக் கிடைக்கும் இந்த சலுகை தொடரும்.
- காத்திருப்புக் காலம்: பழைய பாலிசியில் ஏற்கனவே முடிந்த காலங்கள் புதிய பாலிசியிலும் கணக்கில் எடுக்கப்படும்.
- Pre-existing disease coverage: உங்கள் பழைய நோய்களுக்கு எதிரான காத்திருப்புக் காலம் புதிய பாலிசியில் மீண்டும் தொடங்காது.
ஏன் மாற்றுவது நல்லது?
- பிரீமியம் குறைவாக இருக்கலாம்
- மேலும் அதிக ஹாஸ்பிடல் நெட்வொர்க் இருக்கலாம்
- விருப்பமிக்க ‘அட்டடான்’ மற்றும் சவுகரியங்கள் கிடைக்கலாம்
- முன்னாள் நிறுவனத்தின் சேவையில் திருப்தியில்லாத நிலை
முக்கிய ஆலோசனைகள்
- மாற்றத்துக்கு முன், புதிய நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் உங்களுக்கான நிபந்தனைகளை நன்கு படிக்க வேண்டும்.
- அனைத்து ஆவணங்களையும் தயார் வைத்திருங்கள்.
- இணையதளங்கள், comparison portals மூலம் பல்வேறு நிறுவனங்களை ஒப்பிட்டு சிறந்த பாலிசியை தேர்வு செய்யலாம்.
- புதிய பாலிசியில் ‘Portability’ எனும் பதத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மருத்துவக் காப்பீடு என்பது வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பான முதலீடு. ஆனால், ஒரே நிறுவனத்தில் தொடர வேண்டிய கட்டாயம் கிடையாது. உங்களுக்கு மேலும் சிறந்த சேவையளிக்கக்கூடிய நிறுவனங்கள் இருக்குமானால், உரிமையுடன் பாலிசியை மாற்றிக்கொள்ளலாம். IRDAI அமைத்துள்ள நடைமுறைகள் மூலம், உங்கள் பழைய பாலிசியின் நன்மைகள் பாதுகாக்கப்பட்டபடியே, புதிய நிறுவனத்தில் தொடர முடியும். எனவே, சிந்தித்து, ஆராய்ந்து, உங்கள் தேவைக்கு ஏற்ப சரியான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.


