Asianet News TamilAsianet News Tamil

வெண்டை சாகுபடியில் நல்ல மகசூலை பெற இந்த முறையில் சாகுபடி செய்யலாம்…

Buns can be grown in this way to get good yield on bunches ...
Buns can be grown in this way to get good yield on bunches ...
Author
First Published Sep 4, 2017, 12:13 PM IST


வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் மற்றும் சிறந்த வருமானம் பெறலாம்.

இரகங்கள்: 

கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

வெண்டை பயிரானது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்கு தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர்காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.

வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம்.

நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.

பருவம்: 

ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மார்ச்.

விதையளவு: 

ஹெக்டேருக்கு 7.5 கிலோ தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்:

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும்.

பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.

நிழலில் ஆறவைத்த அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும்.

இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.

நீர் நிர்வாகம்:

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

உரமிடுதல்:

அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து இடவேண்டும்.

நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

இலைவழி ஊட்டம்:

ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60 ஆவது நாளில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தலாம்.

காய்த்துளைப்பான்:

வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும். ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோ கிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.

கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

 சாம்பல் நிற வண்டு:

இதைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இடவேண்டும்.

நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து 1 கிலோ இடவேண்டும்.

அசுவினிப்பூச்சி:

இதைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய்:

இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்கவேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடவேண்டும். 2 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது அவசியம்.

மகசூல்:

ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12 முதல் 15 டன் வரை காய்கள் கிடைக்கும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை விரிவாக்க அலுவலகங்களை நேரில் அணுகலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios