70 நாளில் 25 ஆயிரம் லாபம் அள்ளலாம்; உளுந்து பயிர் செய்யுங்கள்…
வயல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும், சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும்.
சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்து கொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது.
ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது,
உளுந்து குறித்த தகவல்கள்.
65 நாட்களில் அறுவடைக்கு வரும் ரகம்!
உளுந்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பரவலாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, பாண்டிச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவு மானாவாரியில் பயிரிடப்படுகிறது.
குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகமாக விளைகிறது. அம்மாதங்களில் பனியின் ஈரப்பதத்திலேயே உளுந்து வளர்ந்து விடும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக உளுந்தை வயலில் தூவி விடுவார்கள். அது, நெல்வயலின் ஈரப்பதத்தைப் பிடித்துக்கொண்டு வளரும். இப்படி நெல் தரிசாக பயிரிடுவதற்கு ஏ.டீ.டி-3, ஏ.டீ.டி-4, ஏ.டீ.டி-5 ரகங்கள் ஏற்றவை.
மானாவாரியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வம்பன் ரகங்களைப் பயிரிடலாம். இறவைக்கும், மானாவாரிக்கும் கே.எம்-2 ரகம் ஏற்றது. இந்த ரகம் 65 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடும். உளுந்தை தனிப்பயிராக விதைக்காமல், ஊடுபயிராகவும் விதைக்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 2013-2014 ம் ஆண்டில் 16,000 டன் விற்பனையாகி உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 74 கோடி ரூபாய். (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 4,550 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 5,600 ரூபாய்க்கும் விற்பனையானது).
2014-2015 ம் ஆண்டில் 20,000 டன் அளவு விற்பனையாகி உள்ளது. இதனுடைய மதிப்பு 96 கோடி ரூபாய். (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 5,600 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கும் விற்பனையாகி இருக்கிறது).
நடப்பு ஆண்டில் (2015-2016) மார்ச் மாத முடிவில் விழுப்புரம் சந்தைக்கு 16,000 டன் வரை வந்திருக்கிறது. இதனுடைய மதிப்பு 148 கோடி ரூபாய் (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 9,600 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 15,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது).
சத்தான சந்தை வாய்ப்பு!
உளுந்துக்கான தேவை அதிகம் இருப்பதால், பெரும்பாலும் உள்நாட்டிலேயே விற்பனையாகி விடுகிறது. வியாபாரிகள் பொதுவாக, பூச்சி தாக்காத, மாவுத்தன்மை அதிகமாக உள்ள உளுந்தைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பொதுவாகவே விவசாயிகள் கயவைத்து, சுத்தமாக எடுத்து வந்தால், நல்ல விலைக்கு போகிறது. தமிழ்நாட்டில் தேவை அதிகமாக இருக்கிறது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வரத்து குறைவாகவே இருக்கிறது. அதனால் விலை அதிகமாக இருக்கிறது.
2016 ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு 11,000 முதல் 14,000 வரை விற்பனையாகி நல்ல விலை கிடைத்து வருகிறது, வரும் காலங்களில் மேலும் விலை அதிகரித்துக் கொண்டே போகும். இப்போது கூட விவசாயிகள் உளுந்து விதைப்பை ஆரம்பித்தால், 70 ம் நாளில் வருமானம் பார்க்கலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியில் 400 கிலோவும், இறவையில் 600 கிலோவும் மகசூம் எடுக்கலாம். ஊடுபயிராக பயிரிடும்போது கிட்டதட்ட 100 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 8 கிலோ விதை உளுந்து தேவைப்படும்.
மானாவாரியில் விதைக்கும்போது தொடர்ந்து ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இறவையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். சராசரியாக இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
70 நாளில் 25 ஆயிரம் லாபம்!
உளுந்து, செம்மண் மற்றும் கரிசல் மண் நிலத்துல அதிகமா வளரும். மானாவாரியில் சாகுபடி செய்தால் கோ-5, வம்பந்3, வம்பந்4, ஆகிய ரகங்களைத் தேர்வு செய்றது நல்லது. இந்த ரகங்களை 70 நாள்லயே அறுவடை செய்யலாம்.
மானாவாரியில ஏக்கருக்கு 300 முதல் 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இப்போ சந்தையில, குவிண்டால் 10,000 ரூபாய்க்கு மேல விலை போகுது.
சராசரியா நாலு குவிண்டால்னு வெச்சுகிட்டாக்கூட 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல 15 ஆயிரம் செலவுத் தொகையைக் கழிச்சுட்டா கூட, 25 ஆயிஅம் ரூபாய் லாபமா கிடைக்கும்.
இறவையில் பயிரிட்டால், லாபம் இன்னும் அதிகமாகும்.