துவரை, உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…
மாவட்ட விவசாயிகள் ஆடிப்பட்டத்துக்கு தகுந்தபடி துவரை, உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.
துவரை சாகுபடி:
ஆடிப்பட்டத்துக்கு கோ 5, கோ 6, கோ 7, கோபிஹெச் 2, விபிஎன் 2, ஏபிகே 1, விபிஎன் 1, பிஎஸ்ஆர் 1 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ரகத்துக்கும் தகுந்த பரிந்துரையின்படி 45-க்கு 30, 45-க்கு 20, 90-க்கு 30 செ.மீ. என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதை நேர்த்தி:
டிரைகோடெர்மாவிரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர் உர நேர்த்தி:
ரைசோபியம் 600 கிராமுடன் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம், அரிசி கஞ்சி 400 மி.லி என்ற அளவில் விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
தொழு உரம் 1.5 மெட்ரிக் டன், தென்னை நார்க்கழிவு 6.25 மெட்ரிக் டன், கரும்பு ஆலைக்கழிவு 5 மெட்ரிக் டன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு என்ற அளவில் உரமிட வேண்டும்.
இறவைப் பயிருக்கு தழைச்சத்து 25 கிலோ அல்லது யூரியா 55 கிலோ, மணிச்சத்து 50 கிலோ இட வேண்டும். சாம்பல் சத்து 25 கிலோ அல்லது மூரியேட் ஆப் பொட்டாஷ் 42 கிலோ இட வேண்டும்.
நுண்ணூட்டச் சத்து:
ஜிப்சம் 110 கிலோ, சிங்க் சல்பேட் 12.5 கிலோ இட வேண்டும்.
மானாவரிப் பயிருக்கு தழைச்சத்து 12.5 கிலோ அல்லது யூரியா 27 கிலோ இட வேண்டும். மணிச்சத்து 25 கிலோ அல்லது சூப்பர் பாஸ்பேட் 156 கிலோ இட வேண்டும். சாம்பல் சத்து 12.5 கிலோ ஏக்கருக்கு என்ற அளவில் இட வேண்டும்.
களை நிர்வாகம்:
களை முளைக்கும் முன் பென்டிமெத்திலின் 2 லிட்டர் என்ற அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 3ஆவது நாள் போதுமான ஈரப்பதம் இருக்கும்போது இட வேண்டும்.
காய்த் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தலாம். என்விபி வைரஸ் ஹெலிகோவெப்ரபா ஆகியவற்றை ஹெக்டேருக்கு 625 மி.லி. என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
உளுந்து சாகுபடி:
விபிஎன் 1, 2, 3, 4 அல்லது கோ 5, ஏடிடீ 5, 3, டிஎம்வி 1, டி 9 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம். ஹெக்டேருக்கு 20 கிலோ விதையளவு போதுமானது. 30-க்கு 10 செ.மீ. இடைவெளி அவசியம்.
விதை நேர்த்தி:
டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் என்ற அளவில் ஒரு கிலோ விதைக்கு கலந்து விதை நேர்த்தி செய்யலாம். அசோஸ்பைரில்லம் 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் உடன் அரிசி கஞ்சி கலந்து நிழலில் 15-30 மணி நேரம் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
தொழு உரம் ஹெக்டேருக்கு 12.5 மெட்ரிக் டன் அல்லது தென்னை நார்க்கழிவு 6.25 மெட்ரிக் டன் அல்லது கரும்பு ஆலைக் கழிவு 5 மெட்ரிக் டன் என்ற அளவில் உரம் இட வேண்டும்.
மானாவரிப் பயிருக்கு தழைச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ அல்லது யூரியா 27 கிலோ, மணிச்சத்து 25 கிலோ அல்லது சூப்பர்பாஸ்பேட் 156 கிலோ மற்றும் சாம்பல் சத்து 12.5 கிலோ அல்லது பொட்டாஷ் 21 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
நுண்ணூட்டச்சத்து ஜிப்சம் 55 கிலோ, சிங்க் சல்பேட் 12.5 கிலோ இட வேண்டும்.
களை நிர்வாகம்:
களை முளைக்கும் முன்பாக பென்டிமெத்திலின் 2 லிட்டர் ஹெக்டேருக்கு அல்லது ப்ளூகுளோரோஸின் 1.5 லிட்டர் என்ற அளவில் தேர்வு செய்து விதைத்த 3ஆவது நாள் ஈரப்பதம் இருக்கும்போது 50 கிலோ மணலுடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இத்தகைய சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறலாம்.