தெரிந்து கொள்ளுங்கள்: நடவு வயலில் குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

Product kotaimalai the land with the main field of 2 - 3 times the soil on the plant will require increasing nirpitipput reduce water requirements
agricultural information-VLBLNT


நடவு வயல் தயாரிப்பு கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 – 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம்.

மேலும், களைகளை கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணிலுள்ள பூச்சிகளின் கூண்டுப்புழுப் பருவம், நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, 200 கிலோ ஜிப்சத்தை இட்டு நன்றாக மண்ணுடன் கலந்து சமன் செய்ய வேண்டும்.

பிறகு 10 கிலோ துத்தநாகசல்பேட் அல்லது 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

உரமிடுதல்: மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும் அல்லது பொதுப் பரிந்துரைப்படி ஏக்கருக்கு 50 : 20 : 20 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும்.

அதாவது 109, 125 மற்றும் 34 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

தழைச்சத்து:

28 கிலோ யூரியாவை அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ள யூரியாவை தலா 27 கிலோ என்ற அளவில் நடவு நட்ட 15, 30, 45 ஆம் நாள்களில் மேலுரமாக இட வேண்டும்.

யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5: 4 :1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும். அப்போதுதான் யூரியாவிலுள்ள தழைச்சத்து உடனடியாக கிரகிக்கப்பட்டு பூக்கள் மலர்ந்து கருவுற்று அதிக எடையுடன் கூடிய நெல் மணியாக மாறி அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

கடைசி முறையாக இடப்படும் யூரியா மட்டும் எதனுடனும் கலக்காமல் தனியாக இடப்பட வேண்டும். 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை முழுவதுமாக அடியுரமாக இடவேண்டும்.

சாம்பல் சத்து:

17 கிலோ பொட்டாஷ் உரத்தை அடியுரமாகவும், மீதமுள்ள 17 கிலோ பொட்டாஷ் உரத்தை நடவு நட்ட 30 நாளிலும் இடவேண்டும்

களை நிர்வாகம்:

நாற்று நட்ட 3 ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பிரிட்டிலாகுளோர் அல்லது 45 கிராம் ஆக்ஸாடயர்ஜில் அல்லது 4 கிலோ பென்சல்ப்யூரான் மீதைல் பிரிட்டிலாகுளோர் மருந்துகளில் ஏதாவது ஒரு களைக் கொல்லியை 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவி களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நாற்று நட்ட 15 – 20 நாள்களுக்குள் 100 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் அல்லது 30 கிராம் அசிம்சல்ப்யூரான் அல்லது 600 கிராம் 2, 4 டி சோடியம் இவற்றுள் ஏதாவது ஒரு மருந்தை 200 விட்டர் தண்ணீரில் கலந்து கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி இடும்போது வயலில் சிலிர்ப்பு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு 2 – 3 நாள்களுக்கு நீரை வடிக்கக் கூடாது.

நீர் நிர்வாகம்:

நெல் வயலுக்கு தொடர்ந்து தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதனால் 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

நெற்பயிரின் மிக முக்கிய நீர்த் தேவை பருவங்களான தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.

இலைவழி ஊட்டச்சத்து:

யூரியா 1 சதவீதம் (2 கிலோ ஏக்கருக்கு), டிஏபி 2 சதவீதம் (4 கிலோ ஏக்கருக்கு), பொட்டாஷ் 1 சதவீதம் (2 கிலோ ஏக்கருக்கு) கலவையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கதிர் உருவாகும்போது ஒரு முறையும், பின்பு 10 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிப்பதனால் நெல் மகசூல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு: நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

பூச்சி, நோய்களுக்கு எதிர்ப்புத் திறனுள்ள ரகங்களை பயன்படுத்துவது: கோடை உழவு செய்தல் வேண்டும். அடியுராக வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும் வயலில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வயல், வரப்புகளில் களை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். நோய்த் தாக்கப்பட்ட செடிகளை உடனே பிடிங்கி அப்புறப்படுத்த வேண்டும்.

வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.

20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios