உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல்! 3வது இடத்திற்கு முன்னேறிய பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், பேஸ்புக் பயனர்களின் விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதாக எழுந்த புகாரில், அந்நிறுவன பங்குகளின் மதிப்பு சரசரவென சரிந்தது. அதேநேரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மையில் பல கோடி ரூபாயை அபராதமாகவும் செலுத்தினார். இதனாலும், அவரது சொத்து மதிப்பு குறைந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களில் அவர் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அது என்னவென்றால், புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி, மார்க் ஜுக்கர்பெர்க் முதன்முறையாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, உலக மிகப்பெரிய பணக்காரராக இருந்த வாரன் பஃபெட், கடந்த 2006ஆம் ஆண்டு தனது பெரும்பாலான சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு எழுதி வைத்ததால், அவருடைய சொத்து மதிப்பு சரிவை கண்டது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால், மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பே உயர்ந்து, அப்போதே வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியிருப்பார் என கூறப்படுகிறது.
இருப்பினும், பேஸ்புக் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 2.4 % உயர்ந்ததை அடுத்து 34 வயதான மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்திற்கு காலடி எடுத்து வைத்தார். அவரது சொத்து மதிப்பு, ரூ.5.61 லட்சம் கோடி என்றும், இந்த சொத்து மதிப்பு வாரன் பஃபெட்டை விட ரூ.2,656 கோடி அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், ரூ.7.70 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸாஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், ரூ.6.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
இளைஞர்கள் பேஸ்புக்குக்கு அளித்துவரும் ஆதரவு தொடர்ந்தால், விரைவில் மார்க் ஜுக்கர்பெர்க் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடித்து விடுவார்.