உலகில் முதன்முறையாக ரோபோக்கள் குத்துச்சண்டை போட்டி சீனாவில் மே 25ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
World's First Robot Boxing Match in Hangzhou on May 25: உலகளவில் குத்துச்சண்டை போட்டி பிரபலமான விளையாட்டாக விளங்கி வருகிறது. இந்த போட்டிகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் குத்துசண்டையில் பிரபலமான வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். நீங்கள் குத்துச்சண்டை போட்டியை நேரிலோ அல்லது டிவியிலோ பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால் ரோபோக்கள் குத்துச்சண்டை போடுவதை பார்த்திருக்கிறீர்களா?
சீனாவில் ரோபோக்கள் குத்துச்சண்டை போட்டி
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. அந்த நாட்டை சேர்ந்த யூனிட்டிரீ என்ற ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து குத்துச்சண்டை போட்டிக்கும் தயார் செய்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதாக மனிதர்களை போலவே நடக்கவும், ஓடவும், நடனமாடவும் அந்த ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ரோபோக்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி
மோஷன் கேப்ச்சர் (Motion capture) என்ற தொழில்நுட்பம் மூலம் ரோபோக்களுக்கு குத்துச்சண்டை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்படியான உடல் வலிமை திறன் சார்ந்த போட்டிகளில் ரோபோக்களை பங்கேற்க வைப்பதன் மூலம் அவற்றின் வேகம், செயல் திறன், செயல்படும் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து அப்டேட் செய்து கொள்ள முடியும் என்று யூனிட்டிரீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வலிமையான ரோபோக்கள் உருவாக்கம்
''எங்கள் ரோபோக்கள் முன்பு நிகழ்த்திய முந்தைய நடன நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது, குத்துச்சண்டை போட்டி மிகவும் சவாலான ஒன்றாகும். இது திட்டத்தின் மிகவும் கடினமான பகுதியாகும். குத்துச்சண்டை ரோபோக்கள் திறமையானவர்களாக, வலிமையானவர்களாக இருக்க வேண்டும், அதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு ரோபோக்களுக்கான சிறப்பு தரவுத் தளங்களை உருவாக்கியது. குத்துச்சண்டை போட்டிகள் அதிக சக்தியை எடுத்துக்கொள்வதாலும், டுமையான குத்துக்களுக்கு ஆளாக நேரிடுவதாலும், ரோபோக்கள் அடிகளைத் தாங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன'' என்று யூனிட்டிரீ நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநரான காவ் யுவான் கூறியுள்ளார்.
மனிதர்களை போலவே ரோபோக்கள் விளையாடும்
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் ரோபோக்களை மனிதர்கள் குழு தான் கட்டுப்படுத்தும். மனிதர்கள் குத்துச்சண்டை போலவே ரோபோக்கள் குத்துச்சண்டையும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் குத்துச்சண்டை போட்டியில் மனிதர்கள் கீழே விழுந்து மீண்டும் எழுந்து அடிப்பதை போலவே ரோபோக்களும் செய்யும் எனவும் யூனிட்டிரீ ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெறும் ரோபோவுக்கு Iron First King என்ற பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
