ஆப்கானிஸ்தானில் பெண்கள் இனி வீட்டிலேயே இருக்கணும்... தொடங்கியது தலிபான்கள் அட்டூழியம்.!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு வர வேண்டாம் என்றும் பல்வேறுப் பணிகளில் இருந்த பெண்கள் இனி வீட்டிலேயே இருக்க வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு தலிபான்கள் வசம் வந்துவிட்டது. அங்கு தற்போது தலிபான்கள் இடைக்கால ஆட்சியையும் அமைந்துள்ளனர். தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பழமைவாதத்தோடு நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பெண்ணுரிமைக்கு எதிராக அன்றாடம் பல அறிவிப்புகளை வெளியிட்டு தலிபான்கள் அதிர வைத்து வருகின்றனர். பெண் கல்விக்கு அங்கு தலிபான்கள் பல முட்டுக்கட்டைகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மகளிர் நலத் துறை, தற்போது நன்னடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனத் தலிபான்கள் பெயரை மாற்றிவிட்டனர். பெண்கள் பொருளாதார மேம்பாடு, கிராமப்புர பெண்கள் மேம்பாட்டு திட்டத்தையும் முடக்கிவிட்டனர். தலைநகர் காபூலில் 2900 அரசப் பணியாளர்களில் 27 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். வருவாய், கட்டுமானம், பொறியியல் எனப் பல துறைகளில் பணிகளில் இருந்தனர். அவர்களை காபூல் மேயர் இனி பணிக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.
இதுகுறித்து காபூல் நகர மேயர் ஹம்துல்லா நமோனி வெளிநாடு இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “எந்தெந்தப் பணிகளை ஆண்கள் செய்ய முடியாதோ அந்தப் பணிகளில் எல்லாம் பெண்கள் தொடர அனுமதித்துள்ளோம். ஆனால், ஆண்கள் செய்யக்கூடிய பணிகளை இனி அவர்களே செய்வார்கள். பெண்கள் வீட்டிலேயே இருக்கலாம். நிலைமை சரியாகும் வரை இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.