இனி யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை...! முதல் முறையாக கார் ஓட்டும் சவுதி பெண்கள் மகிழ்ச்சி!
வரலாற்றிலேயே முதன் முறையாக சவுதி அரேபிய பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு பெண்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்டுவது என்பது சமூக கேடு என்று அங்குள்ள பழமைவாத மத குருமார்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இதனால், பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதியில் தடை இருந்து வந்தது.
இதனை எதிர்த்து 1990 ஆம் ஆண்டு முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு உரிமை கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே, சவுதியில் பெண்களும், ஆண்களும் ஓட்டுநர் உரிமம்பெற விண்ணப்பம் செய்யலாம் என்று மன்னர் சல்மான் ஆணை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின.
சவூதியில் பெண்கள் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று, இதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் நிச்சயம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சவுதி நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடந் முடிவடைந்துள்ளது. பெண்கள் சுதந்திரமாக கார் ஓட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. உற்சாகமடைந்த பெண்கள் இன்று காலை முதல் மகிழ்ச்சி பொங்க கார் ஓட்டி மகிழ்கின்றனர்.
நான் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்வதற்கு யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. கார் இயக்கத் தெரிவதால், என்னால் சுலபமாக அவ்விடத்துக்கு செல்ல முடியும். சாலையில் அச்சமின்றி கார்களில் செல்லலாம் என்றும் சவுதி பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
30 ஆண்டுகளாக நடந்த இந்த போராட்டத்துக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. சவுதியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது நீக்கப்பட்டுள்ள கார் ஓட்டும் தடை அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது என்றே கூறலாம்.