உலகின் மிக விலையுயர்ந்த நகரம்: முன்னேறும் சிங்கப்பூர் - என்ன காரணம்?

தமிழ்நாட்டு மக்கள் அதிகம் செல்லும் வெளிநாடான சிங்கப்பூர் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

Why Singapore is the second most expensive city for expats

உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஹாங்காங் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக உள்ளது. முதலிடத்தை ஹாங்காங் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அதிகம் செல்லும் வெளிநாடான சிங்கப்பூர் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பு குறித்து மெர்சர் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஹாங்காங் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் ஆறு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் நகரங்களான   சூரிச், ஜெனிவா மற்றும் பாசல் ஆகிய நகரங்கள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.

மெர்சர் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்கத் தலைவரான ட்ரேசி மா கூறுகையில், ‘சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், அதன் வலுவான நாணய நிலை. அத்துடன் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் ஆகியவற்றால் ஏற்படும் உயர் பணவீக்கம்’ என்கிறார். இந்த பிராந்தியம் முழுவதும், பெரும்பாலான முக்கிய சந்தைகளில் தாங்கள் அதிக பணவீக்கத்தை அனுபவித்ததாகவும் அவர் கூறுகிறார்.

மெர்சர் நிறுவனத்தின் முடிவுகள், இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மனித மூலதன நிறுவனமான ECA இன்டர்நேஷனல் நடத்திய வெளிநாட்டினருக்கான வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து சற்று வேறுபடுகின்றன. ECA இன்டர்நேஷனல் கணக்கெடுப்பில், நியூயார் முதலிடத்தையும், ஹாங்காங் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. அந்த கணக்கெடுப்பிலும் சிங்கப்பூர் 8 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தது.

ECA இன் அறிக்கையின்படி, நியூயார்க் நகரத்தில் வீட்டுச் செலவுகள் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கொரோனாவுக்கு பிறகு நியூயார்க் நகரில் வானளாவிய அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகையும் ஒரு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் சிங்கப்பூரின் தங்குமிட விநியோகம் தேவைக்கு ஏற்றவாறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ECA இன் கூற்றுப்படி, ஹாங்காங்கில் வீட்டின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. மக்கள் தொகையின் வீழ்ச்சி, அடமானங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பது உள்ளிட்டவைகளே இதற்கு காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சீன மற்றும் ஜப்பானிய நகரங்கள் தனது கருத்துக்கணிப்பின் போக்குகளை மாற்றியதாக மெர்சர் ஆய்வு கூறுகிறது. மிக முக்கியமாக, சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் கூட வராமல், முறையே 13ஆவது மற்றும் 1ஆ9வது இடங்களை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தரவரிசையில் அதிக இடங்களை இழந்த மூன்று நகரங்கள் - யோகோஹாமா, நகோயா மற்றும் ஒசாகா ஆகியவை. ஜப்பான் நகரங்களான இவை கடந்த ஆண்டை விட 56 முதல் 65 இடங்கள் கீழே சரிந்துள்ளன.

சீன நகரங்களும் தரவரிசையில் வீழ்ச்சியடைந்தன. ஷாங்காய் 12ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டாலும், ஷென்சென் ஏழு இடங்கள் சரிந்து 20ஆவது இடத்துக்கும், குவாங்சோ 18ஆவது இடத்திலிருந்து 36ஆவது இடத்துக்கும், கிங்டாவோ 22ஆவது இடத்திலிருந்து 55ஆவது இடத்துக்கும் சென்றுள்ளது. சீனாவின் பொதுவான செயல்திறனால் வீட்டுச் சந்தை சுருங்கி வருவதாகவும், வாடகை சொத்துகளுக்கான தேவை குறைந்து வருவதாகவும் மெர்சர் நிறுவனம் விளக்கியுள்ளது.

உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

சீனா மற்றும் ஜப்பானின் அனைத்து பிரதான நகரங்களுமே தர வரிசையில் சரிவடைந்துள்ளன. ஒப்பீட்டளவில் நுகர்வோர் தேவை குறைவு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக அவர்களின் பலவீனமான நாணய நிலை ஆகியவற்றை இந்த வீழ்ச்சிக்கான காரணமாக ட்ரேசி மா சுட்டிக்காட்டுகிறார். ஜப்பானில் உள்நாட்டு நுகர்வு குறைவாகவே உள்ளது. அது தொற்று நோயில் இருந்து மீள்வதை பாதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெர்சர் ஆய்வின்படி, உலகளவில், டென்மார்க்கின் கோபன்ஹேகன் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் 6ஆவது இடத்தையும், இஸ்ரேலின் டெல் அவிவ் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. வட அமெரிக்காவிற்கான தரவரிசையில் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாக டெல் அவிவ் உள்ளது.

தேசிய நாணயக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய நிதி நிலைமைகளின் இறுக்கம் ஆகியவற்றால் 2023 இல் மந்தமான வருமான வளர்ச்சி இருப்பதுடன் அதிக வேலையின்மையும் ஏற்படும் என மெர்சர் கணித்துள்ளது.

”உலகளாவிய செல்வம் மற்றும் வாழ்க்கை முறை அறிக்கை 2023”-யை சுவிட்சர்லாந்து தனியார் வங்கியான ஜூலியஸ் பேர் வெளியிட்டுள்ளது. பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் பகுப்பாய்வு மூலம் நகரங்களில் நன்றாக வாழ்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை இந்த அறிக்கை தரவரிசைப்படுத்தியுள்ளது. அந்த தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிராந்திய சராசரியுடன் ஒப்பிடும்போது நல்ல உணவு, பிரீமியம் விஸ்கி, வணிக வகுப்பு விமானங்கள் மற்றும் கார் விலைகள் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்கு பிறகு சிங்கப்பூர் அதன் எல்லைகளை முன்கூட்டியே மீண்டும் திறந்தது. இதனால், அந்நகரம் புதிய வரவுகளால் பிரபலமடைந்தது. இது வீட்டு விலைகள் உயர வழிவகுத்தது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜூலியஸ் பேர் தரவரிசையில், 2022 ஆம் ஆண்டு முழுவதும் சீனாவில் கடுமையான கொரோனா நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஷாங்காய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விலையுயர்ந்த வணிக வகுப்பு விமானங்கள் மற்றும் அதிக விலை கொண்ட உணவு வகைகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஜூலியஸ் பேர் தரவரிசையில் ஹாங்காங் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரவு, ஹோட்டல் அறைகள், உணவின் விலைகள் உயர்ந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios