இனி எல்லாமே அவ்ளோதான்னு நினைக்காதீங்க.. கொரோனாவுடன் வாழ கற்றுக்கோங்க.. திரும்பத் திரும்ப வலியுறுத்தும் WHO!!
மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக உலகை அலறவிட்டு வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாளுக்கு நாள் பல நாடுகளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1.75 கோடி பேர் கொரோனாவில் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6.76 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 1.09 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளிலும் பல நாடுகளிலும் வேகம் பிடித்துள்ளன. சில நாடுகளில் தடுப்பூசி பணிகள் இறுதிக் கட்டத்துக்கும் வந்துள்ளன. வரும் நவம்பர், டிசம்பரில் தடுப்பு மருந்துகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெனிவா நகரில் உலக சுகாதார அமைப்பின் (WHO) மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், “கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மனிதனின் வாழ்கையே முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். பிற வைரஸ்கள் நம்மைச் சுற்றி உள்ளதைப்போல இனி கொரோனா வைரஸும் இருக்கும், அதோடு சேர்ந்து வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே உலக சுகாதர நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. தற்போது மீண்டும் அதையே அந்த அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.