கொரோனா வைரஸ் உலகளவில் வேகமாக பரவி வருவதாகவும், அதன் தாக்கம் இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.  உலகளவில் இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் உலக நாடுகள் திண்டாடி வரும் நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரலின் கருத்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.  உலகம் முழுவதும்  92 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 4 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் இந்த வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில்  நோய்த் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில்  இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது  கடந்த திங்கட்கிழமையன்று உலக சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொற்று  முன்பைவிட இன்னும் வேகமாக பரவி வருகிறது,  அதன்  தாக்கம் அடுத்த பத்தாண்டுகளுக்கு  உணரப்படக்கூடும், அதேநேரத்தில், உலகமே எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்த வைரஸ் மட்டுமல்ல, உலகளாவிய ஒற்றுமை இன்மையும் மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தின் பற்றாக்குறையுமே என அவர் கூறினார். இந்த தொற்றுநோயை பிளவுபட்ட உலகத்துடன் நாம் வெல்ல முடியாது, ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே முடியும். தொற்றுநோயை அரசியல் மயமாக்குவது அதிகரித்துள்ளது, நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்,  உண்மையில் நாம் பாதுகாப்பாக இல்லை என அவர் கூறினார். கொரோனா வைரஸ்  நோய்த் தொற்றின் ஆபத்து குறித்து WHO கடந்தவாரம் எச்சரித்தது, இந்நிலையில்  நோய் வேகமாக பரவி  வந்தாலும்,  மக்கள்  முழு அடைப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகின்றனர். 

கோவிட்-19 உலக அளவில் சுமார் 9 மில்லியன் மக்களை பாதித்துள்ளது,  4,65,000 கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது என தெரிவித்துள்ள அவர், இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது,  ஐரோப்பா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்த தொடங்கியுள்ளது,  உலக அளவில் வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் இந்த தொற்றுநோய் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.  இதன் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொற்று நோய் இன்னும் வேகமாக பரவி வருகிறது என அவர் கூறினார். கொரோனா வைரஸ் ஒரு சுகாதார நெருக்கடியின் உச்சம் என்பதை நாம் அறியும் அதேநேரத்தில், இது மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடி,  சமூக நெருக்கடி,  இன்னும் பல நாடுகளில் அரசியல் நெருக்கடி என அவர் கூறினார்.  இந்த வைரசை தடுக்க இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வரும் நிலையில் இந்த வைரஸின் அறிகுறிகள் மற்றும் அது கண்டறிவதற்கு முன்னர்,  இது எந்த அளவிற்கு பரவக்கூடும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர் என அதானோம் கூறினார்.