கொரோனா காற்றில் பரவும் என்ற கூற்றை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார நிறுவனம்..!! 239 விஞ்ஞானிகளின் கோரிக்கை பரிசீலனை.
கொரோனா வைரஸை பரப்பும் வழிகளில் ஒன்றாக காற்றின் மூலம் பரவுதல் மற்றும் எரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 239 விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் கடிதம் எழுதி இருந்த நிலையில் உலகச் சுகாதார நிறுவனம் அதை பரிசீலித்து வருவதுடன், பல்வேறு விஞ்ஞானிகளுடன் இணைந்து அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி நாள் நோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவரும் நிலையில், உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இந்த வைரஸ் குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது அதன் தன்மை என்ன? கட்டுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக அளவில் இருந்து சுமார் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் சுமார் 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்குவர், அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்படுகிறது. இதனாலேயே மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும், அது பல மீட்டர் தூரம் பயணித்து அருகில் உள்ள மக்களை பாதிக்கிறது. குறிப்பாக மூடிய அறைகள், அல்லது மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. பள்ளிக்கூடங்கள், கடைகள் மற்றும் இன்னும் பிற இடங்களில் வேலை செய்யும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்வது ஆபத்தானது, ஏனென்றால் சுமார் 2 மீட்டர் தூர இடைவெளியில் அமர்ந்து பயணிப்பவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது, எனவே உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உடனே மாற்ற வேண்டும், காற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை அறிவிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா வான் கெர்கோவ், கொரோனா வைரஸை பரப்பும் வழிகளில் ஒன்றாக காற்றின் மூலம் பரவுதல் மற்றும் எரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம். மேலும் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவது குறித்து உலகச் சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதுடன், அது எவ்வாறு காற்றில் பரவுகிறது, எந்த அளவிற்கு பரவுகிறது என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் தரவுகளை திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த பலவாரங்களாக அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதில் ஏராளமான விஞ்ஞான குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார். மேலும் விஞ்ஞானிகள் அளித்துள்ள தகவலில் வைரஸ் காற்றின் பரவுவதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றாலும் அவர்களுடைய கருத்தை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.