கொரியாவின் சவாலை முழு வீச்சில் எதிர்கொள்வோம் - கேப்டன் சுனிதா லக்ரா நம்பிக்கை...
ஆசிய சாம்பியன்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் கொரியாவின் சவாலை முழு வீச்சில் எதிர்கொள்வோம் என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சுனிதா லக்ரா தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியின் ரௌண்ட் ராபின் முறையிலான இறுதி ஆட்டத்தில் கொரியாவை இன்று இந்தியா எதிர்கொள்கிறது.
தனது முந்தைய ஆட்டங்களில் ஜப்பானை 4-1, சீனாவை 3-1, மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே இன்று கொரியாவை எதிர்கொள்கிறது.
இதுதொடர்பாக கேப்டன் சுனிதா லக்ரா, "உலகின் 9-ஆம் நிலை அணியாக உள்ள கொரிய அணி சிறந்த அணிதான்.
உள்ளூர் ஆதரவுடன் விளையாடவுள்ள அவர்களின் சவாலை முழு வீச்சில் எதிர்கொள்வோம். இந்திய வீராங்கனைகள் சிறந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். இப்போட்டியில் நாம் தாக்குதல் முறையை கையாள்வோம்" என்று கூறினார்.
தலைமைப் பயிற்சியாளர் மார்ஜின், "சீனா, ஜப்பானுக்கு எதிராக நமது அணி அதிக முன்னிலை பெற்றது. பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றுவதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
கொரியாவுடன் மோதும் ஆட்டத்தில் நாம் கவனம் செலுத்தினால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தை எளிதாக ஆடலாம்" என்று கூறினார்.