விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தினத்தில் தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் என்ன நினைத்தோம் என்பதை ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் பேசிய ராகுல் காந்தி, நான் என்னுடைய அனுபவத்தில் இங்கு பேசுகிறேன். மிகப்பெரிய வன்முறையை எதிர்கொள்ள நாம் மன்னித்துவிட்டு செல்வதை தவிர வேறு வழியே இல்லை. எதற்காக வன்முறையை எதிர்கொண்டிருந்தாலும், நமக்கு எந்த அளவிற்கு தீங்கு ஏற்பட்டிருந்தாலும் மன்னிப்பதை தவிர வேறு வழி இருக்க முடியாது. 

தற்போது நான் வன்முறையை வெறுப்பதற்கும் அமைதியை விரும்புவதற்கும் எனது ஆரம்ப கால கட்டத்தில் நான் எதிர்கொண்ட சம்பவங்கள் தான் காரணம். இதனால் நான் பலவீனமானவன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நான் பிறரை மன்னிப்பதால் என்னை பலமானவன் என்று கருதுகிறேன். 1991ம் ஆண்டு ஒரு தீவிரவாதியால் என் தந்தை கொல்லப்பட்டார். என் தந்தையை கொலை செய்த தீவிரவாதி 2009ம் ஆண்டு கொல்லப்பட்டு இலங்கையில் வீழ்ந்து கிடப்பதை நான் பார்க்க நேர்ந்தது. அப்போது எனது சகோதரியை தொடர்பு கொண்டு எனக்கு தற்போது மிகவும் விசித்திரமாக உள்ளது.

 

 ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். என் தந்தையை கொலை செய்த ஒருவர் கொல்லப்பட்ட போது உண்மையில் நான் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அன்று எனக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று பிரியங்காவிடம் கூறினேன். அப்போது பிரியங்காவும் சரி தான் எனக்கும் இப்போது மகிழ்ச்சி இல்லை என்று தெரிவித்தார். ஏனென்றால் என் தந்தை கொல்லப்பட்ட போது எனக்கு எப்படி இருந்தது என்று என்னால் உணர முடியும். அதே போலத்தான் பிரபாகரனின் குழந்தைகளும் தற்போது இருப்பார்கள் என்பதால் என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. பிரபாகரன் மோசமான நபராகவோ அல்லது நாசக்கார மனிதராகவோ இருக்கலாம், ஆனால் அவரது வன்முறை அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது, என்னுடைய குடும்பத்தையும் பாதித்துள்ளது.

இன்னும் சிறிது ஆழமாக சென்று பார்த்தால் பிரபாகரன் வன்முறையை கையில் எடுக்க அவர் எதிர்கொண்ட வன்முறையே காரணமாக இருந்திருக்கலாம். அதாவது பிரபாகரன் வன்முறை பாதையை தேர்வு செய்யும் கட்டாயம் அவர் எதிர்கொண்ட வன்முறையால் ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிரபாகரன் வன்முறையை கையில் எடுத்திருக்கமாட்டார். தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் பாதிப்புகள் பிரபாகரனை வன்முறை பாதைப்பு திருப்பியிருக்கலாம். வன்முறையை வன்முறையால் வெல்ல முடியும் என்று நினைப்பத கற்பனை. வன்முறையை எந்த காலத்திலும் வன்முறையால் வெல்ல முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.