போரில் தமிழர்களை கொன்றவனுக்கு கிடைத்த பரிசு...! வெட்கக்கேடு என ஐநா கடும் கண்டனம்...!
ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை சிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
ஈழத்தில் நடந்த இறுதி கட்ட போரில் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவனுக்கு கடற்படை தளபதி பதவி வழங்கி இனபடுகொலையை இலங்கை அரசு தொடரந்து நடத்த துடிக்கிறது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார் அது தொடர்பாக அவர் வெளியுட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர் இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2009ஆம் ஆண்டு போரின்போது இவர் தலைமையில் இயங்கிய சிங்கள இராணுவத்தின் 58ஆவது பிரிவு கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது.
விடுதலைப்புலிகளின் தளபதிகளான நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய முன்வந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஒருவரை இலங்கைப் படையின் தலைமை தளபதியாக இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்திருப்பது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை சிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அத்துடன் நின்றுவிடாமல் சில்வா மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன்.