Russia-Ukraine crisis : யாராவது இருக்கீங்களா..ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணல..உக்ரைன் அதிபர் அதிர்ச்சி வீடியோ !!
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், 'ரஷியப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர்.
மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். நேட்டோ படைகள் எங்களுக்கு உதவவில்லை. உதவுகிறோம் என்று சொன்னவர்களும் எங்களுக்கு உதவவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் நாட்டிலிருந்து 18-60 வயதுடையோர் வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்கி துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாகவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.