கொரோனா வைரஸிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அமெரிக்கா ஐரோப்பா போன்ற வல்லரசு நாடுகள் திணறி திண்டாடி  வரும் நிலையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வியட்நாம் இந்த வைரஸை தங்கள் நாட்டில் இருந்து விரட்டி அடித்துள்ளது. அந்த சிறிய நாட்டின்  திறனை உலக நாடுகள் எல்லாம்  வியந்து பாராட்டி வருகின்றனர் .  ஆம்... ஒரு பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் வியட்நாம் பெரும் பங்காற்றியுள்ளது என வியட்நாமின் நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது .  வியட்நாமில் மொத்த மக்கள் தொகை சுமார் 10 கோடி  வியாழக்கிழமை நிலவரப்படி நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 270 ,  அதிலிருந்து  சிகிச்சைப்பெற்று மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 219 ,  சுமார் 51 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் . 

ஆனால் இதுவரை ஒருவர் கூட அங்கு உயிரிழக்கவில்லை ,   இந்தநிலையில் வியட்நாமில் எந்த மாகாணத்திலும் கொரோனா நோய் தொற்றுக்கான புதிய அறிகுறிகள் தற்போது வரை தென்படவில்லை , எனினும் அத்தியாவசிய தேவைகளற்ற கடைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் நுயென் ஜூ வான் கடந்தவாரம்  அறிவித்திருந்தார்,  முதல்முறையாக ஜனவரி மாத இறுதியில் வியட்னாமில் கொரொனா உறுதிப்படுத்தப்பட்டது .  அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆரம்பம் முதல் வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையங்களில் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது,  பரிசோதனைகளை நாடு முழுதும் தீவிரப்படுத்தியது தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் .  இதற்காக பெரிய ஓட்டல்களை வியட்நாம் அரசு பயன்படுத்திக் கொண்டது .

 

தகவல் தொழில்நுட்ப தொடர்புகள் மூலம் கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் வைரஸ் எவ்வளவு விரைவில் பரவுகிறது என்ற தகவலை மக்களிடம் மிக விரைவாக  கொண்டு சென்றது. நாட்டின் பல்வேறு மையங்களில் பரிசோதனை மையங்களை அரசு அமைத்தது பிரதமர் அலுவலகம் அமைச்சர்கள் அலுவலகம் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு  ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்பட்டது வியட்நாமின் மருத்துவ பரிசோதனை கருவிகள் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் சிறந்த பலனை அளித்தன ,  சுமார் 90 நிமிடத்திலேயே ஒரு நபருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தின ,  மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவ பரிசோதனை கருவிகள் தான் வியட்நாம் அரசின் இந்த வைரஸ் எதிர்ப்பு போராட்டத்திற்கு பெரிதும் கை கொடுத்தன .

 

வியட்னாமில் கொரோனா  நோய் கட்டுக்குள் கொண்டுவர தொடக்கத்தில் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்தது கட்டுப்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.  மேலும் கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர் ,  ஆனால்  மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றில் குறைந்த வீச்சில் இருந்த சிங்கப்பூர் தற்போது தெற்காசிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்ட நாடாக மாறியுள்ளது . ஆனால் வியட்நாம் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு கடுமையாகவும் மனித நேயத்துடனும் அமல்படுத்தியதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று சங்கிலி உடைக்கப்பட்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் நாட்டு மக்களுக்கும் மருத்துவர்களுக்கும்  நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளது அந்நாட்டு அரசு.  சீனா கியூபாவைத்  தொடர்ந்து உலகிற்கு வழிகாட்டியாய் இப்போது வியட்நாம் தலைநிமிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .