ஆப்பிரிக்க தொழிலாளர்களை அடிக்கும் சீன மேலாளர்: இனவெறி சர்ச்சை!
ஆப்பிரிக்க தொழிலாளர்களை சீன மேலாளர் ஒருவர் அடித்து உதைக்கும் வீடியோ வைரலாகி இனவாத விவாதத்தை எழுப்பியுள்ளது
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆப்பிரிக்கத் தொழிலாளர்களை குச்சியால் அடித்து, காலால் மிதித்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பத்திரிகையாளர் டோம் லுக்ரே, ஊழியர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இருக்கும் ஊழியர்கள் கொள்கலன் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்துள்ளனர். சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் அவர்களை நோக்கி வசைபாடி, பின்னர் தான் கையில் வைத்திருந்த குச்சியால் அவர்களை அடித்து காலால் மிதிக்கும் காட்சிகளும், கடுமையான காயம் ஏற்படாமல் இருக்க தலையை மூடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை அவர் இரக்கமின்றி தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
சுமார் 12 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகும் அந்த வீடியோவும் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க முடியவில்லை என்றாலும் கூட, இனவெறி, அடிமைத்தனம் பற்றிய விவாதங்களை அந்த வீடியோ எழுப்பியுள்ளது. “ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளை மனிதனை விட சீனர்கள் மிகவும் இனவெறி கொண்டவர்கள்.” என அந்த வீடியோவை பகிர்ந்திருந்த பத்திரிகையாளர் டோம் லுக்ரே காட்டம் தெரிவித்துள்ளார்.
“உலகம் முழுவதும் நடக்கும் மனித உரிமை மீறல்களை முற்றிலுமாக புறக்கணித்து, அனைவரும் அமெரிக்காவிற்கு எதிராக மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள்.” என எக்ஸ் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்!
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீன திட்ட மேலாளர்களால் ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதை எடுத்துக்காட்டும் ஒரு அறிக்கையை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டது. ஜெனீவா டெய்லி செய்தியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஆப்பிரிக்காவில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், ஒப்பந்த ஊதியத்திற்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், மத்திய ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள ஒரு நீதிமன்றம், தொழிலாளி ஒருவரை சவுக்கால் அடிக்கும் வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, சீனாவை சேர்ந்த சன் ஷுஜுன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த விவகாரம் ஆப்பிரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள சீன தூதரகம், உள்ளூர் சட்டங்களைப் பின்பற்றுமாறு தனது குடிமக்களை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.