எது "மோசமாக நடக்கக்கூடும்" என்று சொல்லப்பட்டதோ அது மோசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏதோ பகவத் கீதை வசனம் போல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். புகுஷிமா அணுவுலை இப்பூமிக்கு மோசமான ஆபத்தாக முடியும் என்று சொல்லப்பட்டு வந்தது, இப்போது உண்மையாகிவுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவின் மூன்று உலைகள் வெடித்து சிதறின. விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து உலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கின. வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரும், அணுக்கழிவுகளை சேமித்துவைக்கும் குளங்களில் இருந்த நீரும், அணுவுலைகளுக்குள் புகுந்த தண்ணீரும் என "அதிக கதிர்வீச்சு" கொண்ட நீர் 1000 தொட்டிகளில் சேமித்துவைக்கப்பட்டது. 

இதுதவிர நாளொன்றிற்கு சுமார் 500 டன் "குறைந்த கதிர்வீச்சு" கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேர்ந்து கொண்டிருந்தது. தினம் தினம் கடலுக்குள் செல்லும் நீரை தடுப்பதற்காக கட்டப்பட்ட "பனிச்சுவர்" முழுமையாக வெற்றிபெறவில்லை, 500 டன் நீர் 100 டன்னாக குறைந்ததே தவிர முழுவதுமாக கட்டுப்படுத்தமுடியவில்லை. இப்போது 1000 தொட்டிகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ள நீர் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது, இந்த 10,00,000 டன் "அதிக கதிர்வீச்சு" கொண்ட நீரை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேமிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த விஷயத்தை கையாள, அந்த தொட்டிகளில் உள்ள நீரை பசிபிக் கடலுக்குள் அனுப்புவது என்று முடிவெடுத்திருப்பதாக ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சேமித்துவைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள கதிர்வீச்சை நீக்க முயற்சித்தாலும், அதிலுள்ள ஹைட்ரஜனின் ஐசோடோப்பான ட்ரிடியதை நீக்க தேவையான தொழில்நுட்பம் உலகத்தில் எந்த நாட்டிடமும் கிடையாது. சேமிக்கமுடியாமல் போவதால் இப்போது பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதை தவிர வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என்கிறார் யோஷியாகி ஹராடா, இன்னும் இறுதி முடிவெடுக்கவிட்டாலும் அதில் போய்தான் முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
விபத்திற்குள்ளான புகுஷிமா அணுவுலைகளை செயலிழக்கசெய்யும் குழுவை சேர்ந்த ஹிரோஷி மியானோ தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, சேமித்துவைக்கப்பட்டுள்ள தண்ணீரில் உள்ள கதிர்வீச்சை நீக்கி  பாதுகாப்பான அளவிற்கு கொண்டுவருவதற்கு குறைந்தது இன்னும் 17 ஆண்டுகளாகும் என்று தெரியவந்துள்ளது. இதனால் பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதை தவிர வேறுவழி கிடையாது என்று தெரியவருகிறது. பசிபிக் பெருங்கடல் ஏற்கனவே செத்துவிட்டது என்றும், “நாங்கள் பார்த்த சார்டைன்களும், சுறாக்களும் இப்போது பார்க்கமுடியவில்லை” என்று மாலுமிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் 10 லட்சம் டன் அதிக கதிர்வீச்சு கொண்டநீர் கடலில் சேர்ந்தால் என்னவாகும் என்ற அச்சம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.உணவிற்காக தென்கொரியா நாடு பசிபிக் பெருங்கடலை நம்பி இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஜப்பான் நாட்டை சேர்ந்த மீனவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாழாகிப்போன தங்கள் வாழ்க்கையை இப்போதுதான் மீட்டுருவாக்கம் செய்யத்துவங்கியுள்ள மீனவர்கள் இத்திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாக கெடுத்துவிடும் என்ற அச்சத்திலுள்ளனர். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கான நேரம் நெருங்கிவருவதால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடியும் ஜப்பான் நாட்டின் மீது அதிகமாகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் வெற்றிபெற்றபோதே பிரதமர் ஷின்ஜோ அபே, புகுஷிமாவில் அனைத்து விஷயங்களும் கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தார், 
ஆனால் உண்மை வேறுமாதிரியாக உள்ளது.- இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.