தொடரும் சறுக்கல்; ஷேர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் வேதாந்தா குழு?
தொடரும் சறுக்கல் காரணமாக லண்டன் பங்குச்சந்தையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை குழுமமான வேதாந்தா வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் பல நாடுகளில் சட்டவிரோத சுரங்கங்களை வைத்திருப்பதாகவும், சுற்றுசூழலை மாசுப்படுத்துவதுடன் உள்ளூர் மக்களை வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் தொழிலாளர் கட்சியின் எம்.பி. யான ஜான் மெக்டோனல் குற்றம் சாட்டினார். இந்தியா, ஜாம்பியா உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமைகளை மீறுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது. எனவே பங்குச்சந்தை ஒழுங்கு முறையாளர்கள் வேதாந்தா ரிசோர்சஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜான் மெக்டோனல் வலியுறுத்தினார். இது குறித்து லண்டன் பங்குச்சந்தை கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குழுமமான வேதாந்தாவை லண்டன் பங்குச்சந்தை தனது பட்டியலில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுச் சந்தையில் வணிகமாகி வரும் வேதாந்தா குழுமத்தின் 33.47% பங்குகளையும் வாங்கி கொள்ள அந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பங்குச்சந்தை பட்டியலில் இருந்து வேதாந்தாவை நீக்க வேண்டும் என பிரிட்டனின் எதிர்க்கட்சி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.