சீனா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும்  நிலையில், அமெரிக்கப் போர்  விமானங்கள் சீன வான்பரப்பில் வட்டமடித்து வருவதாக பீஜிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஷாங்காயில் இருந்து சுமார் 76.5 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமெரிக்க உணவு மற்றும் போர் விமானங்கள் அடிக்கடி வட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா திடீரென அறிவித்ததை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செங்டுவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி தூதரகங்களை மூட நிர்ப்பந்தித்து வருவதால் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நீடித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துப் போர் நடந்து வருகிறது. 

அதே நேரத்தில், தென் சீனக் கடலுக்கு அமெரிக்கா தனது கப்பற்படை கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பி சீனாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க கடற்படையின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் உருவாக்கக்கூடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். தென் சீன கடலில் சீனா கட்டுப்பாட்டில் உள்ள தீவுகள் மற்றும் திட்டுக்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல்  நடத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது, இதனால் இரு நாட்டும் இடையே போர் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.  சர்வதேச சட்டத்தை பொருத்தவரை தென் சீனக் கடலில் உள்ள  நன்ஷா (ஸ்ப்ராட்லி) தீவுகள் மீதான சீனாவின் இறையாண்மை மற்றும் கடல் உரிமைகளை நிராகரித்து அமெரிக்கா கருத்து தெரிவித்து வருகிறது. 
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேக் பாம்பியோ, தென் சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் கண்டித்துள்ளார். 

அதேபோல் சீனாவுக்கு தென்சீனக் கடலில் எந்த உரிமையும் இல்லை எனவும் எச்சரித்துள்ளார், மேலும் தென்சீனக் கடலை அதன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலகம் அனுமதிக்காது எனவும் எச்சரித்துள்ளார். எதிர்வரும் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பின்தங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், சீனாவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் செல்வாக்கை மேம்படுத்த  அவர் இறங்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராணுவ நடவடிக்கைகளை பொறுத்தவரை அமெரிக்கா தனது கப்பல் மற்றும் விமான நடவடிக்கைகளை தென்சீனக்கடலில் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு முறை அமெரிக்கா ராணுவ ஒத்திகை நடத்தி உள்ளது. தென்சீனக் கடலில் சீனா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா நீண்டகாலமாக திட்டமிட்டு வருவதாகவும், சர்வதேச அரசியல் நோக்ககர்கள் எச்சரிக்கின்றனர்.  தென் சீனக் கடலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளதாகவும் அமெரிக்க தரப்பிலிருந்து ஏற்படக்கூடிய தாக்குதலுக்கு  பதிலளிக்க சீனத் தரப்பு விரைவில் இராணுவத் திட்டங்களை உருவாக்குவது மிக அவசியம் எனவும் எச்சரிக்கின்றனர். 

அமெரிக்காவின் ஆர்.சி -135, ஈ -8 சி மற்றும் பி -8 ஏ போன்ற பல உளவு விமானங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட இடைவிடாமல்  இப்பகுதியில் பறந்தன, பி -1 பி மற்றும் பி -52 எச் குண்டுவெடிப்பாளர்கள் தென் சீனக் கடலில் பல முறை பறந்ததாக, பீக்கிங் பல்கலைக்கழக பாதுகாப்பு ஆராய்ச்சி குழு கூறி உள்ளது. மேலும் பி -1 பி மற்றும் பி -52 எச் போன்ற குண்டுவீசு தாக்கும் விமானங்கள் தென் சீனக் கடலில் பல முறை வட்டமிட்டு வருவதாகவும் எச்சரித்துள்ளது.