அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 70,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 71,388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3வது நாளாக பாதிப்பு 60,000ஐ கடந்துள்ளது. நேற்று முன்தினம் 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். நேற்று 63,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.53 லட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றன. நோய் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் முகக் கவசம் அணியாததன் விளைவாகவே கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறியுள்ளனர்.