கொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..!
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஒன்றாக பணிபுரிந்து வருவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஒன்றாக பணிபுரிந்து வருவதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸுக்கு ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் மருந்து கண்டுபிடிக்க திட்டமிடுவதாகவும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவுடன் உரையாடிய அவர், ‘’கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான தகவல் தொடர்பு இரு நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் ஒன்று சேர்த்துள்ளது. இரு நாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலம் ஆயுர்வேத மருத்துவ முறையை ஊக்குவிக்க இணைந்து பணியாற்றி வருகிறது.
இரு நாடுகளிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான ஆயுர்வேத மருந்து கலவைகளை பயன்படுத்தி மருத்துவ சோதனைகளைத் துவக்க திட்டமிட்டு வருகின்றனர். நமது விஞ்ஞானிகள் இது குறித்த ஞானத்தையும் ஆய்வு தரவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியைப் பற்றிக் கூறும் போது, இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து மூன்று தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டு ஆராய்ச்சிகள் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும்’’என்று அவர் தெரிவித்தார்.