அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தலில் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் இந்த வெற்றியை ட்ரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் Electoral college எனப்படும் தேர்வாளர்களின் முடிவே இறுதியானது.
 
அந்தவகையில் ஜோ பைடனின் வெற்றியை தேர்வாளர்கள் குழு உறுதிசெய்துள்ளது. இதற்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், ஜோ பைடன் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் 46வது அதிபராக அவர் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பு சட்டம், மக்களின் விருப்பம் ஆகியவை மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். நாட்டின் ஜனநாயகம் சோதிக்கப்பட்ட போதும், வலுவானதாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.