அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கனிம வள ஒப்பந்தம் செய்யவுள்ளார். இதன் மூலம் உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா சுரண்ட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறாரோ, இல்லையோ அங்கு இருக்கும் கனிம வளங்களை சுரண்டுவதற்கு தயாராகிவிட்டார்.
பணிந்த உக்ரைன் ஜெலன்ஸ்கி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறார். இதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து வருகிறார். எப்படியாவது போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவினால் போதும் என்ற முடிவுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வந்துவிட்டார். இதைப் பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் தவறவில்லை. மிரட்டலும் விடுத்து வருகிறார். உக்ரைனே இருக்காது என்று பகிரங்கமாக எச்சரித்தார். போருக்கு காரணமே உக்ரைன் தான் என்று டிரம்ப் மிரட்டினார். ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார் டிரம்ப். தற்போது ரஷ்யாவும், அமெரிக்காவின் கைக்குள் சென்ற நிலையில், ஜெலன்ஸ்கி வழி தெரியாமல் பணிந்தார்.
கனிம வள உடன்பாடு
இந்த நிலையில், வாஷிங்டனின் ஆதரவைப் பெற ஜெலன்ஸ்கியும் முயற்சித்து வருகிறார். இயற்கை வளங்கள் மற்றும் மறுகட்டமைப்பு தொடர்பான வரைவு திட்டம் மற்றும் கனிம ஒப்பந்த விதிமுறைகளில் அமெரிக்காவும் உக்ரைனும் உடன்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28ஆம் தேதி கையெழுத்து ஒப்பந்தமாகிறது.
உக்ரைன் அமெரிக்கா இணைப்பு நிதி
எந்த மாதிரியான திட்டம் என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது உக்ரைனில் கிடைக்கும் இயற்கை வளங்கள் சுரண்டலில் உக்ரைன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பங்கு இருக்கிறது. இதில் இருந்து கிடைக்கும் வருமானம் உக்ரைன் - அமெரிக்கா இணைப்பு நிதி என்ற தனிப்பட்ட கருவூலத்திற்கு செல்லும். ஒப்பந்தத்தின் வரைவில் "பாதுகாப்பு" குறித்த குறிப்பு உள்ளது. ஆனால் அமெரிக்காவின் உறுதிப்பாடுகளை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
ஒப்பந்தம் குறித்து டிரம்ப்
செய்தியாளர்களுடனான முந்தைய உரையாடல் ஒன்றில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வாஷிங்டன் டிசியில் "மிகப் பெரிய ஒப்பந்தத்தில்" கையெழுத்திட விரும்புவதாக டிரம்ப் கூறினார். மேலும் டிரம்ப் கூறுகையில், ''இது மிகப் பெரிய ஒப்பந்தம். ஜெலன்ஸ்கி வாஷிங்டனுக்கு வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு வருகிறார் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை ஒப்பந்தம் கையெழுத்து ஆவது உறுதியாகி உள்ளது.
உக்ரைனில் அமெரிக்கா முதலீடு
உக்ரைனில் முதலீடு செய்வதற்கும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனில் அமைதியைக் கொண்டு வருவதற்கும், உறுதியான பாதுகாப்பைக் கொண்டு வரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான அனைத்து எதிர்மறையான அறிவிப்புகளையும் வாபஸ் பெற்றுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட நாடு, வாழ தகுதியற்ற நாடு போன்ற அறிவிப்புகளை வாபஸ் பெற்றுள்ளது. இத்துடன் 500 டாலர் பில்லியன்களை உக்ரைன் நிவாரணப் பணிக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது அமெரிக்கா.

500 பில்லியன் டாலர் கேட்கும் டிம்ரப்
விண்வெளி, மின்சார வாகனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான கனிமங்களை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கைகளை ஜெலென்ஸ்கி முன்பு நிராகரித்து இருந்தார். இது பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவுடனான போரின் போது அமெரிக்கா வழங்கிய 60 பில்லியன் டாலர் ராணுவ உதவியை விட அதிகமாகும்.
உக்ரைனில் என்ன கனிமங்கள் உள்ளன?
ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் 5% முக்கியமான மூலப்பொருட்கள் தற்போது உக்ரைனில் உள்ளன. 19 மில்லியன் டன் கிராஃபைட் இருப்புக்கள் உக்ரைனில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவை மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.
லித்தியம் உக்ரைன்
ஐரோப்பாவின் மொத்த லித்தியம் வைப்புத்தொகைகளில் மூன்றில் ஒரு பங்கு, உக்ரைனில் உள்ளது. தற்போது பேட்டரிகளை தயாரிப்பதில் லித்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் டைட்டானியம் உற்பத்தியில் 7% உக்ரைனில் உள்ளது. இது விமானங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோபால்ட், தாமிரம், லித்தியம் மற்றும் நிக்கல் கனிமங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவை போக்குவரத்தை மின்மயமாக்குவதற்கும், காற்றாலைகளை நிர்மாணிப்பதற்கும் உதவும். இதே கனிமங்களை வைத்து மொபைல் போன்கள், AI தரவு மையங்கள் மற்றும் F-35 போர் விமானங்கள் போன்ற ஆயுதங்களை தயாரிக்கலாம். இதனால் இந்த கனிமங்கள் முக்கியமானவை. உலகப் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் மாறும்போது, முக்கியமான கனிமங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் சேராவிட்டால், உக்ரைனுக்குள் நேட்டோவை உருவாக்குவோம்: ஜெலென்ஸ்கி!!
50 கனிமங்கள் பட்டியல்
2022 ஆம் ஆண்டில், அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS), அலுமினியம் முதல் சிர்கோனியம் வரையிலான 50 கனிமங்களின் பட்டியலை வெளியிட்டது. அவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்று தெரிவித்து இருந்தது. குறைக்கடத்திகளுக்கு ஆர்சனிக்; விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களில் உலோகக் கலவையாக பயன்படுத்தப்படும் பெரிலியம்; பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கு கோபால்ட், லித்தியம் மற்றும் கிராஃபைட், தொடு திரைகளை உருவாக்க இண்டியம்; மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் டெல்லூரியம் ஆகியவை குறிப்பிடத்தக்க கனிமங்களாகும்.
அமெரிக்கா தனது எரிசக்தி திட்டத்தை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தான் உக்ரைனுடன் நாளை கையெழுத்திடுகிறது அமெரிக்கா. சொன்னதை சாதித்தார் டிரம்ப். பணிந்தார் ஜெலன்ஸ்கி.
