Asianet News TamilAsianet News Tamil

போருக்கு மத்தியில் இஸ்ரேல், ஜோர்டான் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவில் புடின்!!

இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்கிறார்.

US President Joe Biden visit Israel and Jordan tomorrow says Antony Blinken
Author
First Published Oct 17, 2023, 10:22 AM IST

இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் பகுதியின் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் சூழலும் மாறி வருகிறது. துவக்கத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் 120 இஸ்ரேல் மக்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. தற்போது 199 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை விடுவித்தால் மட்டுமே தரைவழி தாக்குதல் நடத்தப்படாது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

இதற்கு இடையே இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன் அரபு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார். இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதால், இதை தணிக்கும் வகையில் பைடனின் பயணம் அமையும் என்று கூறப்படுகிறது. ஜோ பைடனின் பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதிபடுத்தி உள்ளார்.

ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!

காசாவின் வடக்குப் பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் இருப்பதால், அந்தப் பகுதியில் இருக்கும் பாலஸ்தீனிய மக்களை தெற்கு காசாவுக்கு இடம் பெயருமாறு அமெரிக்கா, இஸ்ரேல் கேட்டுக் கொண்டு இருந்தது. இதன்படி மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இதையடுத்தே, நிறுத்தப்பட்டிருந்த குடிநீர், மின்சாரம், உணவு ஆகியவற்றை தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் வழங்கி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை அழிப்பதே குறிக்கோள் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. வடக்கு காசாவில் இருக்கும் பங்கர்களை அழிக்க வேண்டும் என்பது இஸ்ரேலின்  திட்டம்.

சீனா சென்ற ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்! சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று சந்திப்பு

இதற்கிடையே, கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ''இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், கிட்டத்தட்ட 200 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். முதியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர், சிதைக்கப்பட்டனர் மற்றும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இது ஒரு படுகொலை... நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பிரிட்டன் உள்பட 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள். குறைந்தது ஆறு பிரிட்டன் குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பத்து பேர் காணவில்லை" என்று தெரிவித்தார். 

முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசி இருந்தார். அரபு நாடுகளின் தலைவர்களிடம் பேசியது குறித்தும் பெஞ்சமினிடம் புடின் விளக்கம் அளித்தார். எந்தளவிற்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பது குறித்து மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். 

ஈரான் உள்பட அரபு நாடுகளின் அழுத்தத்திற்கு பின்னர் நேற்று பேட்டி அளித்து இருந்த ஜோ பைடன், ''காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது. பாலஸ்தீனியர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். ஹமாஸ் தீவிரவாதிகளை அழிப்பதே நோக்கம்'' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் நாளை இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்.

Follow Us:
Download App:
  • android
  • ios