அமெரிக்காவின் புளோரிடாவில், கிரெய்க் வோக்ட் என்ற நபர் பக்கத்து வீட்டுக்காரர் மீதான பகையால் தான் வளர்த்த மயில்களைக் கொன்று, சமைத்துச் சாப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர், விடுதலையானதும் மீதமுள்ள மயில்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், பக்கத்து வீட்டுக்காரர் மீதுள்ள பகையின் காரணமாக, செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்ட மயில்களைக் கொன்று, சமைத்துச் சாப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரெய்க் வோக்ட் (61) என்ற நபர், தனது பக்கத்து வீட்டுக்காரர் தொடர்ந்து மயில்களுக்கு உணவு அளிப்பதைத் தடுக்கவே இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மயில்களைக் கொன்று சமைத்துச் சாப்பிட்டது குறித்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் தபால் பெட்டியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

பாஸ்கோ கவுண்டி ஷெரிப் அலுவலகத் தகவல்படி, வோக்ட் அந்தக் கடிதத்தில், “பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடர்ந்து என் மயில்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், தொடர்ந்து மயில்களைக் கொல்வேன்” என்று அச்சுறுத்தியுள்ளார். மேலும், மயில்களின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொன்று, அவற்றை வறுத்துச் சமைத்ததாகவும் வோக்ட் விவரித்துள்ளார்.

எல்லா மயில்களையும் கொன்றுவிடுவேன்

இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் பேரில், ஹட்சன் நகரில் வோக்ட் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் வோக்ட்டைக் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவர் மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, "நான் விடுதலை செய்யப்பட்டதும், யாரும் என் மயில்களைப் பிடித்துச் சென்றுவிடாதபடி, என்னிடம் மீதமுள்ள எல்லா மயில்களையும் கொன்றுவிடுவேன்" என்று அவர் கூறியுள்ளார்.

40 க்கும் மேற்பட்ட வழக்குகள்

மயில்களை கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக, வோக்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, இவர் மீது பொது இடத்தில் குடிபோதையில் இருத்தல், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் மோசமான தாக்குதல் உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே உள்ளன.

வோக்ட் எத்தனை மயில்களை வளர்த்தார் என்ற சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதுபோன்ற கொடூரச் செயல்களுக்குப் பின்னால் ஆழமான உளவியல் சிக்கல்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.