சட்டவிரோத குடியேற்றத்தை எளிதாக்குவதாகக் கூறி, இந்தியப் பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவிற்கு தெரிந்தே சட்டவிரோதமாகக் குடியேறுவதை எளிதாக்குவதாகக் கூறி, இந்தியாவில் உள்ள பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
"அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தை வேண்டுமென்றே எளிதாக்கியதற்காக, இந்தியாவை தளமாகக் கொண்ட மற்றும் இந்தியாவில் செயல்படும் பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்:
சட்டவிரோத குடியேற்றம், மனித கடத்தல் மற்றும் பிற கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய தீவிர நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு கடத்தல் நெட்வொர்க்கை துண்டிக்க, பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தின் ஆபத்துகள் குறித்து வெளிநாட்டினருக்குத் தெரிவிப்பதிலும், அமெரிக்க சட்டங்களை மீறுபவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் அமெரிக்க குடியேற்றக் கொள்கை கவனம் செலுத்துகிறது என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
20,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தல்:
டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற முதல் மாதத்தில் சட்டபூர்வ குடியுரிமை ஆவணம் இல்லாத 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டிரம்ப் நிர்வாகம் அவர் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தொடங்கியது. அவர் பதவியேற்ற முதல் இரண்டு வாரங்களுக்கு தினசரி கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வெளியிட்டு வந்தது.
கடந்த மாதம், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் மீது எடுக்கப்பட்டும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அமெரிக்க எல்லைப் பொறுப்பாளர் டாம் ஹோமன், டிரம்பின் கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றத்தை 96% குறைத்து, எண்ணற்ற பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தலில் இருந்து காப்பாற்றியுள்ளது எனக் கூறினார்.
