ஹொடைடாவின் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா 13 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏமன் மக்கள் காசாவை ஆதரிப்பதைத் தடுத்துவிட முடியாது என்று ஹவுதி அதிகாரி தெரிவித்தார்.
ஹொடைடாவின் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா மீண்டும் 13 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹொடைடாவில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் சனாவில் உள்ள அல்-தவ்ரா, பானி மாதர் மற்றும் அல்-சஃபியா மாவட்டங்களில் அமெரிக்க தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஹொடைடாவைச் சேர்ந்த அல் மசிரா செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதாகக் கூறியுள்ளனர்.
டிரம்ப் எச்சரிக்கை:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு ஹவுதிகளுக்கு எதிராக ஒரு பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தவிருப்பதாக எச்சரித்தார். சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியப் பாதையாக உள்ள செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை அச்சுறுத்துவதை நிறுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போதைய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நவம்பர் 2023 முதல், காசா - இஸ்ரேலின் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்:
ஹவுதி அதிகாரி முகமது நாசர் அல்-அதிஃபி வெள்ளிக்கிழமை அல் மசிரா சேனலுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏமன் மக்கள் காசாவை ஆதரிப்பதைத் தடுத்துவிட முடியாது" என்று தெரிவித்தார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஏமனின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதக் குழுவாகும். இந்தக் குழு 1990களில் இருந்து ஏமனில் செயல்பட்டு வருகிறது. 2014 இல் சனாவைக் கைப்பற்றி அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாடியை நாடுகடத்தியதில் இருந்து சர்வதேச கவனத்தைப் பெற்றது.
