இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த புயலான 'மெலிசா' சூறாவளியின் மையத்திற்குள் அமெரிக்க விமானப் படையின் 'ஹரிகேன் ஹண்டர்ஸ்' நுழைந்துள்ளனர். ஜமைக்காவை அச்சுறுத்தும் இந்த புயல், மணிக்கு 282 கி.மீ. வேகத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் 'மெலிசா' (Hurricane Melissa) சூறாவளியின் மையப் பகுதிக்குள் (Eye of the Storm) அமெரிக்க விமானப் படையின் (US Air Force) சிறப்பு விமானம் நுழைந்து, அங்கிருந்து காட்சிகளைப் பதிவு செய்துள்ளது.
புயலின் மையத்தில் "ஹரிகேன் ஹண்டர்ஸ்"
அமெரிக்க விமானப் படையின் புகழ்பெற்ற "ஹரிகேன் ஹண்டர்ஸ்" (Hurricane Hunters) குழு, 5ஆம் வகை (Category 5) புயலான 'மெலிசா' ஜமைக்காவை நோக்கி நகரும் நிலையில், வானிலை தரவுகளைச் சேகரித்து தேசிய சூறாவளி மையத்திற்கு (National Hurricane Center) அனுப்புவதற்காக இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டது.
விமானம் சூரிய உதயத்திற்குப் பிறகு, புயலின் தென்கிழக்கு திசையில் இருந்து அடர்த்தியான சாம்பல் மேகங்களுக்கு இடையே புயலின் மையப் பகுதிக்குள் நுழைந்தது. விமானி பகிர்ந்த புகைப்படங்களில், புயலின் சுவர் (Eye Wall) ஒரு பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கத்தைப் (Stadium Effect) போல மேல்நோக்கி வளைந்து, மையத்தில் மெல்லிய வெளிச்சத்துடன் சுழலும் மேகங்களைக் காண்பித்தது.
மேலும், மையப் பகுதியில் கடல் மேற்பரப்பில் அலைகள் வெவ்வேறு திசைகளில் நகர்வதையும், மின்னல் வெளிச்சம் புயலின் சுவர்களை ஒளிர்விப்பதையும் விமானக் குழுவினர் பதிவு செய்தனர்.
ஜமைக்காவை மிரட்டும் மெலிசா புயல்
தேசிய சூறாவளி மையத்தின் தகவலின்படி, மணிக்கு 282 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் திறன் கொண்ட இந்த 'மெலிசா' புயல்தான், 1851-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் ஜமைக்காவில் கரையை கடக்கவுள்ள மிக சக்திவாய்ந்த சூறாவளி ஆகும்.
மணிக்கு 6 முதல் 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகரும் இந்த புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜமைக்காவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஜமைக்காவின் சில பகுதிகளில் 13 அடி (4 மீட்டர்) உயரத்துக்கு அலைகள் எழலாம் எனவும், 40 அங்குலத்துக்கு அதிகமாக மழை பெய்து பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் பிராந்தியத்தில், ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு உட்பட பல இடங்களில், இந்த புயலால் இதுவரை குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜமைக்காவில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 800-க்கும் மேற்பட்ட பேரிடர்கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்காவில் உள்ள மக்கள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின் தடையை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
