பைசர் தடுப்பூசியை தொடர்ந்து மாடர்னாவுக்கும் ஒப்புதல்.. கொரோனாவுக்கு சமாதி கட்ட அமெரிக்கா தீவிரம்..!!
இந்த தடுப்பூசி இதுவரை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 91.1 சதவீதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் முன்களப்பணியாளர்களுக்கு இத்தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசியை தொடர்ந்து அமெரிக்காவின் அவசரகால தேவைக்காக மாடர்னா தடுப்பூசியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அவசரகால பயன்பாட்டுக்காக இத்தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. மற்ற நாடுகளைவிட இந்த வைரசால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இத்தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகள் இறுதிகட்டத்தை எட்டி அது மக்கள் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் அளவிற்கு வைரஸை எதிர்த்துப் போரிடுவதாகவும், சிறந்த முறையில் வைரஸை தடுப்பதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகியதை அடுத்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இதனால தடுப்பூசி அனைத்து மாகாணங்களுக்கும் வினியோகிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் கூட கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்த மற்றொரு தடுப்பூசியான மாடர்னாவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மாடர்னா நிறுவன தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அந்நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
அந்நிறுவனத்தின் நிபுணர் குழுவில் உள்ள 21 நபர்களில் 20 பேர் அதை அங்கீகரிக்க வேண்டும் அப்படி அங்கிகரித்தால் மட்டுமே அது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும். ஆனால் இதுதொடர்பாக நடத்தப்பட்ட அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை விட நன்மைகளே அதிகம் என்பதால், இதற்கு நிபுணர் குழு அனுமதி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்பு உள்ளது. அதேபோல் கடந்த வாரம் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி பெற்ற வாக்குகளை விட மாடர்னா தடுப்பூசி கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பதாக தொற்றுநோயியல் நிபுணர் அர்னால்ட் மோன்டோ கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி இதுவரை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 91.1 சதவீதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் முன் களப்பணியாளர்களுக்கு இத்தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாடர்னாவிடமிருந்து சுமார் 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வாங்க அந்நிறுவனத்துடன் 11,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவை என்றும், இரண்டு தடுப்பூசிகளுமே இரண்டு நாட்கள் அதாவது 14 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை வழங்ககூடியதாகும். இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறன் நிலை சுமார் 95 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகம் ஆகும். ஆனால் பைசர் தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகு சிலர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.