uno decided there is no enquiry on srilanka

இலங்கை நாட்டின் மீது சர்வதேச போர் குற்ற விசாரணையை நடத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கும் தீர்மானம் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இலங்கைக்கு சாதகமாக நடந்து கொண்டது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

மனித உரிமைகளை மீறி சிங்கள ராணுவம் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு நாடுகளும், ஐ.நா.மனித உரிமை கவுன்சிலும் வலியுறுத்தின.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இலங்கை அரசு, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது, உள்நாட்டு நீதிபதிகள் மூலமே, தாங்களே விசாரணை நடத்திக்கொள்கிறோம் எனக் கூறியது.

இந்த சூழலில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமைக்கவுன்சில் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு பேசிய பா.ம.க எம்.பி. அன்புமணி ராமதாஸ், இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

இந்நிலையில், இலங்கை மீதான சர்வதேச போர்குற்ற விசாரணையை நிறைவேற்ற மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. 

“ இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்றதலைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, மான்டனெக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகள் சார்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தமும், நெருக்கடியும் கொடுத்து வருகிறார்கள்.

ஆதாலால், இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என உலகத் தமிழர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இந்தியா மவுனம் காத்து எதிராக வாக்களிக்காமல், இலங்கைக்கு சாதகமாக இருந்து கொண்டது.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை நடத்த இன்னும் 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கும் தீர்மானத்துக்கு ஆப்பிரிக்கா நாடான கானா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. மற்ற 40 நாடுகளும் அமைதியாக இருந்ததால், ஓட்டு எடுப்பு இன்றி இந்த தீர்மானம் நிறைவேறியது.

இதனால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை.