சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இரண்டே முக்கால் லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்பதால் உலகம் முழுதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் அனைத்து சமூக, பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியதால், மக்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். மக்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் வருவாயை இழந்துள்ளன. 

ஊரடங்கால் உலகளவில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகளே, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிக்கவும் ஈடுகட்டவும் முடியாமல் திணறிவருகின்றன. ஏழை நாடுகளின் நிலை இன்னும் மோசம்.

கொரோனாவிலிருந்து மீண்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப நீண்டகாலமாகும். ஆனாலும் இப்போதைக்கு கொரோனாவிலிருந்து மீண்டால் போதும் என்கிற மனநிலையில் உலக நாடுகள் இருக்கும் நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, அதைவிட பேராபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. 

இதுகுறித்த ஐநா-வின் எச்சரிக்கையில், கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும். இந்த ஆண்டின் இறுதியில் நிலைமை இன்னும் மோசமடையும். உலகம் முழுதும் 26 கோடி மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பணக்கார நாடுகளும் பணக்கார நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டும்.

கொரோனாவின் உச்சம் இன்னும் 3-6 மாதங்களுக்கு நீடிக்கலாம். எனவே ஏழ்மையான நாடுகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு வருமானமே இல்லை. வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது. பலர் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி, சுற்றுலா என அனைத்துவிதமான பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியுள்ளது. சுகாதார அமைப்புகளும் நெருக்கடியிலும் அழுத்தத்திலும் இருக்கின்றன.

கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் பசி, பஞ்சம், வறுமை ஆகியவை ஏற்படும். போக்குவரத்து தடைகளால் பொருளாதார மந்தநிலை இன்னும் மோசமாகும். அதன் விளைவாக உலகளவில் விநியோக சங்கிலி முறிந்துவிடும். பசி, பட்டினி, வறுமை, பஞ்சத்தால் மக்களிடையே மோதல் ஏற்படவும், அது கொந்தளிப்புகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.