இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவை ஒழிக்க முடியாது...!! தலையில் அடித்துக் கதறும் ஐ.நா பொதுச் செயலாளர்..!!
covid-19 தொற்றுநோயைக் கையாள்வதில் சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணி குட்ரெஸ் விமர்சித்துள்ளார்.
covid-19 தொற்றுநோயைக் கையாள்வதில் சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணி குட்ரெஸ் விமர்சித்துள்ளார். covid-19 க்கு எதிரான போரில் பல நாடுகள் தனித்தனியாக கொள்கை வகுத்துக்கொள்வதன் மூலம் அந்த வைரஸை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றுக்கு எதிராக உலகளவிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை உலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டிய நிலை உள்ளது. நாடுகள் தனித்தனியே செயல்படுவதன் மூலம் பொதுக் கட்டுப்பாடுகள் மீறப்படும் சூழல் உருவாகியுள்ளது என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் சீனாவில் தொடங்கி ஐரோப்பாவிற்கும் பின்னர் வட அமெரிக்காவிற்கும் பரவிய கொரோனா தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கும் பரவியுள்ளது. இன்னும் சில பகுதிகளில் இரண்டாவது அலை எழவும் வாய்ப்புள்ளது, ஆனாலும்கூட கொரோனாவுக்கு எதிராக செயல்படுவதில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது கவலை அளிக்கிறது என்றார்.
மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடும்போது உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவசியம் என அவர் கூறினார். நாடுகளை ஒன்றிணைத்தல் அவற்றின் திறன்களை ஒன்றிணைத்தல் தொற்றுநோயைத் தடுக்கும் வழியாக இருக்கும் எனவும், அனைவருக்கும் சோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகள் போன்றவற்றின் மூலம், ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நோயை தோற்கடிக்க முடியும் எனவும் கூறினார். கோவிட்-19ன் எதிரொலியாக பெருகிவரும் வேலை இழப்புகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அரசியல் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களையும் ஒன்றிணைந்து எதிர்ப்பதன் மூலம் தொற்று நோயினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்று இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய சர்வதேச சவாலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இதை எதிர்க்க ஒன்றிணைந்த சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்றார். மேலும் covid-19 சமாளிக்க, உலகில் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான போர் உள்ளிட்டவற்றை நிறுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் சர்வதேச அளவில் அதற்கு கிடைத்துள்ள பதில் மிகக்குறைவாகவே உள்ளது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாததால் நான் மிகுந்த விரக்தி அடைந்துள்ளேன், ஆனால் இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் தற்போதுள்ள நிலைமைகளை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என கூறினார். இந்த நேரத்தில் அனைவரும் மனதாழ்ச்சியுடன், உலக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதேநேரத்தில் இந்த வைரசுக்கு எதிராக சமூக ஒற்றுமை ஒரு மகத்தான இயக்கமாக மாறி வருவதையும் காண முடிகிறது, குறிப்பாக வைரசுக்கு எதிராக தடுப்பூசி எளிய மக்களின் தடுப்பூசியாக இருக்க வேண்டும், இது பணக்காரர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் நாடுகளுக்கு இடையே வணிகரீதியான தடுப்பூசியாக இருக்கக் கூடாது. அடித்தட்டு ஏழை எளிய மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு தொற்றுநோய்க்கு எதிராக ஒற்றுமையை உருவாக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.