Ukraine - Russia Crisis: ஹிட்லரை வீழ்த்தியது போல புடினையும் வீழ்த்துவோம்... உக்ரைன் அதிரடி!!
ஹிட்லரை வீழ்த்தியது போல புடினையும் வீழ்த்துவோம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஹிட்லரை வீழ்த்தியது போல புடினையும் வீழ்த்துவோம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நான்காம் நாளாக போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்புக்கும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 4,500 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல ஒருசில ரஷ்யாவின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ வாகங்கள், பீரங்கிகளை வீழ்த்தியிருப்பதாகவும் கூறுகிறது. ரஷ்யாவோ ஏராளமான உக்ரைன் வீரர்களைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமான நகரங்களையும் ரஷ்யா தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனிடையே தினமும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உக்ரைனுக்கு சமாதான தூது விடுகிறது. ஆனால் உக்ரைனோ காலம் தாழ்த்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் பொதுவான பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என ரஷ்ய தரப்பு கூறியது.
ஆனால் அந்த நாடு உங்களுக்கு உடந்தையாக செயல்பட்ட நாடு ஆகவே அங்கே நடத்த உடன்பாடில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார். அதேபோல வார்சா, இஸ்தான்புல், பாகூ, புடாபெஸ்ட் ஆகிய நகரங்களில் வைத்துக் கொள்ளலாம் என பட்டியலையும் அனுப்பியுள்ளார். இச்சூழலில் இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்ட ஜெலன்ஸ்கி, உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. அவர்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றனர். அது அப்பட்டமான பொய். நேற்றிரவு ரஷ்யப் படைகளின் தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கூட தாக்குதல் நடத்துகின்றனர். 2ஆம் உலகப் போரின் போது உக்ரைன் எதிர்கொண்டிருந்த நிலை தான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் வாக்குரிமையை நீக்க வேண்டும். உலக நாடுகள் ரஷ்யாவை தனித்துவிட வேண்டும். உக்ரைன் தனக்கு ஆதரவாக ஒரு சர்வதேச படையை உருவாக்கவிருக்கிறது. உலகம் முழுவதும் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பவர்களைக் கொண்டு அந்தப் படை உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தது. இச்சூழலில் உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரியோ குலேபா தந்து டிவீட்டில், உக்ரைனைப் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர், உலக அமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. உக்ரைன் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படை என சொல்லப்படும். இந்தப் படையின் இணைய விரும்புவோர், அவரவர் நாட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை அணுகலாம். நாம் இணைந்தே ஹிட்லரை வீழ்த்தினோம். இணைந்தே புதினை வீழ்த்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.