Russia War: ரஷ்யாவின் திடீர் முடிவு.. போர் நிறுத்தம் அறிவிப்பு.. முக்கிய பாதை வழியாக மக்கள் வெளியேற அனுமதி..
பொதுமக்கள் வெளியேறும் வகையில் மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நேட்டோ:
நேட்டோ இராணுவ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. போர் தாக்குதலால் பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன.
உக்ரைன் ரஷ்யா போர்:
நாட்டின் பல்வேறு இராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 40 லட்சம் மக்கள் போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். 6 வாரங்கள் தொடர்ந்து நடந்து வரும் போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி:
தலைநகர் கீவ்வை கைபற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைன் - ரஷ்யா இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், துருக்கி இஸ்தான்புல்லில் அண்மையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மரியுபோலில் கடும் தாக்குதல்:
இந்நிலையில் கடந்த சில நாட்களாக துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யா படைகள் கடும் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கல், குடியிருப்பு உள்ளிட்ட இடங்களின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் காரணமாக குழந்தைகள் உட்பட 5000 பேர் பலியாகி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் அறிவிப்பு:
இதனிடையே பொதுமக்கள் வெளியேறும் வகையில் மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அந்நகரில் இருந்து ஐபோரிஜியாவுக்கு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மனிதாபிமான பாதையில் மக்கள் வெளியேற்றப்படுவார் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஐபோரிஜியா வரை நான்கு வழித்தடங்கள் செயல்படுத்துவது குறித்த உக்ரைனின் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்ட ரஷ்யா, பேருந்துகள் பாதுகாப்பாக செல்வதை உக்ரைன் ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.