Ukraine - Russia Crisis: பிறந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்கள்.. 4 நாட்களில் 3.68 லட்சம் பேர் வெளியேற்றம்..
Ukraine - Russia Crisis: ரஷ்யா தொடுத்துள்ள போரினால் 3.68 லட்சத்தும் மேற்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றி தங்கள் தேசத்தின் கொடியை நாட்டுவதற்கு ரஷ்ய படைகள் தொடர்ந்து பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது வரை வெறும் 4 நாட்களில் 3.65 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் , இந்த எண்ணிக்கை நான்கு மில்லியன் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போலந்து , மால்டோவா,ஹங்கேரி, ரூமேனியா, சுலோவாக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்து வருவதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாடு வாரியாக தஞ்சம் அடைந்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இதுவரை அதிக பேர் போலந்திற்கு சென்றுள்ளனர். மேலும் கடந்த 48 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உக்ரேனியிலிருந்து எல்லையை கடந்துள்ளதாக போலந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் உக்ரைனில் இருந்து வருபவர்கள் விசா இன்றி வரலாம் என அயர்லாந்து அறிவித்துள்ளது. இதுபோன்று பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு அடைகலம் தர தயாராகி வருவதாகவும் தற்போதைய சூழலில் உக்ரைனியர்கள் 140 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
உக்ரைனில் நான்காம் நாளாக போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்புக்கும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 4,500 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல ஒருசில ரஷ்யாவின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ வாகங்கள், பீரங்கிகளை வீழ்த்தியிருப்பதாகவும் கூறுகிறது. ரஷ்யாவோ ஏராளமான உக்ரைன் வீரர்களைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.