Ukraine - Russia Crisis: போரை நிறுத்த உக்ரைனின் அடுத்த நடவடிக்கை.. ரஷ்யாவிடம் செல்லுபடியாகுமா..?
Ukraine - Russia Crisis: ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டுள்ளது.
உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன. இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே நான்காவது நாளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட ரஷ்யா குண்டுகளை வீசி வருவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். ஆம்புலன்ஸ்கள், மழலையர் பள்ளிகள்,மருத்துவமனைகள் போன்றவற்றை ரஷ்ய படைகள் தாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ரஷ்யா கூறி வருவது அப்பட்டமான பொய் என்று அவர் பேசியுள்ளார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட் என இந்த நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஆனால் பெலாரஸின் ஹோமல் நகரில் ரஷ்யாவின் குழு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை உக்ரைன் மறுத்துள்ளது. இதற்கிடையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் இதுவரை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 150,000க்கும் அதிகமானோர் போலந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை உடனே நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டுள்ளது. மேலும் உக்ரைன் மனு மீதான் விசாரணை அடுத்த வாரம் வரும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு ரஷ்யாவே காரணம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீதான் போரை பொய்யான புகார்களை கூறி நியாயப்படுத்த முயல்கிறது என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.