Ukraine - Russia Crisis: தலைநகரிலிருந்து வெறும் 30 கி.மீ தொலைவில் ரஷ்ய படை..உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன்..
Ukraine - Russia Crisis updates: கீவ் அருகே 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் நெருங்கிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நேட்டோவில் அமைப்பில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது.
அதிபர் ஜெலென்ஸ்கி தலை நகரில்தான் தங்கியுள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக தலைநகரை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும் எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டை(ரஷ்யாவை) தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்'' என்று அவர் கூறி உள்ளார். இந்நிலையில், அணு ஆயுதப் போரையே புடின் சுட்டிக்காட்டி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ அல்லது பிற நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது என்கிற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டல் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில்,ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது.இந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.இந்நிலையில், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியடைந்தது.
மூன்றாவது நாளாக தொடந்து நடைபெற்று வரும் போரில்,உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கீவ் அருகே 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் நெருங்கிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கீவ் நகர மேயர் அறிவித்துள்ளார்.