எங்களை ஆதரியுங்கள்..’அமைதி’ மட்டும் வேண்டாம்.! கண் கலங்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!
எங்கள் தேசத்தில் ரஷியாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் குண்டுகளால் மயான அமைதியைக் கொண்டுவந்துள்ளனர். உங்கள் இசை மொழியில் எங்கள் துயரக் கதையைச் சொல்லுங்கள். உங்கள் சமூக வலைதளங்களிலும் கூட எங்கள் மீதான தாக்குதலைப் பற்றிய உண்மையைச் சொல்லுங்கள்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. ஒரு மாதத்துக்கு மேல் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. அந்த நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் வான்வழி தாக்கு தல்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டன. மேலும் கீவ் நகரை நோக்கி 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவ படை அணிவகுத்து வந்தது.
ரஷியா - உக்ரைன் போர் :
இதனால் கீவ் நகரத்தில் ரஷிய படைகள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். கீவ் புறநகர் பகுதிகளை தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்த ரஷியாவால் தலைநகருக்குள் நுழைய முடியவில்லை. ரஷிய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து பின் வாங்க செய்தனர்.
மேலும் கீவ் புறநகரில் சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது. இதற்கிடயே கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களை சுற்றி இருக்கும் தனது படைகளை குறைப்பதாக ரஷியா அறிவித்தது. உக்ரைன் தலைநகருக்கு அருகே உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய படை பின்வாங்கின. அங்கிருந்து ரஷிய வீரர்கள் வெளியேறினார்கள்.
கிராமி விருது விழா :
இந்நிலையில் 64வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய ஜெலன்ஸ்கி, ‘இசைக்கு எதிரானது எது தெரியுமா? மவுனம். அழிக்கப்பட்ட நகரங்கள், கொல்லப்பட்ட மக்கள் கொண்ட நகரங்கள். அங்கிருக்கும் மவுனம் தான் இசைக்கு எதிரானது. இன்று எங்களின் இசைக் கலைஞர்கள் கோட்சூட்டுக்குப் பதில் கவச உடை அணிந்து பாடுகின்றனர்.
காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கும் மக்களுக்காகப் பாடுகின்றனர். அவர்களின் பாட்டு காயமடைந்தவர்களுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால், இசை எப்படியும் ஊடுருவி விடும். நாங்கள் உயிர்வாழும் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். எங்கள் தேசத்தில் ரஷியாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் குண்டுகளால் மயான அமைதியைக் கொண்டுவந்துள்ளனர். அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள். உங்கள் இசை மொழியில் எங்கள் துயரக் கதையைச் சொல்லுங்கள்.
உங்கள் சமூக வலைதளங்களிலும் கூட எங்கள் மீதான தாக்குதலைப் பற்றிய உண்மையைச் சொல்லுங்கள். எங்களை ஆதரியுங்கள். அதற்காக மவுனத்தைத் தவிர எதை வேண்டுமானாலும் கொடுங்கள். அப்போது அமைதி வரும்’ என்று உருக்கமாக பேசினார்.