உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Attempted Assassination to Russian President Vladimir Putin: உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவ படைகள் இதற்கு ஓரளவு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி

அதாவது மே 20 அன்று உக்ரைனில் நடந்த ட்ரோன் தாக்குதலின் இலக்காக விளாடிமிர் புதினின் ஹெலிகாப்டர் இருந்ததாக ரஷ்ய இராணுவத் தளபதி யூரி டாஷ்கின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது உக்ரைனின் ட்ரோன் புதினின் ஹெலிகாப்டரை தாக்கியதாக ரஷ்ய செய்தி நிறுவனமனா ஆர்.பி.சி தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைன் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி

"நாங்கள் ஒரே நேரத்தில் வான் பாதுகாப்புப் போரில் ஈடுபட்டு, அதிபர் புதினின் ஹெலிகாப்டருக்கான வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்தோம். எதிரிகள் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது'' என்று யூரி டாஷ்கின் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு குர்ஸ்க் ஒப்லாஸ்ட் பகுதிக்கு புதின் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

புதினை அமெரிக்கா கொல்ல முயன்றதா?

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஃபாக்ஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் புதினை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி இருந்தார். கார்ல்சன் தனது 'தி டக்கர் கார்ல்சன் ஷோ' என்ற பாட்காஸ்டில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இருப்பினும், அவர் தனது கூற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் புதினை கொல்ல முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்

இதற்கிடையே ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைன் நகரங்கள் மீது ஒரே இரவில் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கி இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சைட்டோமிரின் வடக்குப் பகுதியில் இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.