சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

உலகளவில் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ், சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றிஅனைவரையும் தாக்கியது. 

அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 வயதான போரிஸ் ஜான்சன், உடல்நிலை படுமோசமானதால் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் மருத்துவர்கள் கடுமையாக போராடி அவருக்கு சிறப்பான சிகிச்சையளித்து அவரை கொரோனாவிலிருந்து மீட்டனர். கொரோனாவிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்து மீண்ட போரிஸ் ஜான்சன், கடந்த சில தினங்களுக்கு முன் அலுவல் பணியை தொடங்கினார்.

இந்நிலையில், தனக்கும் தனக்கு காதலியான 32 வயது கேரி சைமண்ட்ஸுக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் நிக்கோலஸின் பெயரையும் சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என பெயர் சூட்டி, தனது நன்றியை அந்த மருத்துவருக்கு தெரிவிக்கும் விதமாக நன்றியுணர்வை காட்டியிருந்தார் போரிஸ் ஜான்சன். 

உடல்நிலை படுமோசமாக இருந்ததால் ஐசியூவில் சீரியஸாக இருந்த அவரை, மருத்துவர்கள் கடுமையாக போராடி மீட்டனர். இந்நிலையில், தனது மகனுக்கு மருத்துவரின் பெயரை சூட்டியதோடு இல்லாமல், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் என்றைக்குமே நன்றியுடன் இருப்பேன் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தி சன் ஊடகத்திற்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மிகவும் கடினமான தருணம். அப்போது நான் சுயநினைவுடனேயே இல்லை. என்னை நிரந்தரமாக காப்பாற்றுவதற்கு மருத்துவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. அந்தளவிற்கு எனது உடல்நிலை மோசமாக இருந்தது. எனக்கு லிட்டர் லிட்டராக ஆக்ஸிஜனை ஏற்றினர். என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அப்படியான சூழலில், நான் இறந்துவிட்டால் அதை எப்படி அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் மருத்துவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். 

இந்த கண்டிஷனில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அடுத்த ஒருசில நாட்களீல் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் நான் பிழைக்கப்போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையாக போராடி எனது உயிரை காப்பாற்றினர். அவர்கள் நிகழ்த்திய அற்புதத்தால்தான் நான் உயிர்பிழைத்தேன். எனவே அவர்களுக்கு எப்போதுமே நன்றியுணர்வுடன் இருப்பேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார் போரிஸ் ஜான்சன்.