UK general Election result 2024: தட்டி தூக்கிய தொழிலாளர் கட்சி; பிரிட்டன் பிரதமராகிறார் கெயர் ஸ்டார்மர்!!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பொருளாதார நெருக்கடி, ருவாண்டாவுக்கு அகதிகளை திருப்பு அனுப்புவது போன்ற பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்று இருந்தன.
 

UK general election result 2024: Rishi Sunak's Conservative Party, Keir Starmer's Labour Party LIVE

இந்திய மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலை உலகமே உற்று நோக்கி வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது. மேலும்,  கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆட்சியை 14 ஆண்டுகளாக தங்களது கையில் வைத்துக் கொண்டு இருந்தாலும், பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தால் மக்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீது கோபத்தில் இருந்தனர். பிரதமராக ரிஷி சுனக் வந்த பின்னர் பொருளாதாரத்தில் சிறிதளவே முன்னேற்றம் காணப்பட்டாலும், முன்னர் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை ரிஷி சுனக்கால் முற்றிலும் நீக்க முடியவில்லை. பணவீக்கம் ஒரு பக்கம் குறைந்து இருக்கிறது என்று கூறினாலும், மக்கள் சமாதானம் அடைவதற்கு தயாராக இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. மறுபக்கம் ருவாண்டவுக்கு அகதிகளை அனுப்புவது, அவர்கள் என்றுமே பிரிட்டனுக்குள் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு போன்றவை கன்சர்வேடிவ் கட்சியை பதம்பார்த்துவிட்டது.

பிரிட்டன் தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் வெற்றி பெறுவாரா? என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?

இந்த நிலையில் தான் நேற்று பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பின்னடவை சந்திக்கும் என்றும், தொழிலாளர் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பெற்றும் என்று கூறப்பட்டு இருந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக், தொழிலாளர் கட்சியின் தலைவராக கெயிர் ஸ்டார்மெர் உள்ளனர்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 304 இடங்களில் தொழிலாளர் கட்சியும், 63 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாகிரட்ஸ் கட்சி 27 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது.  

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக  போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். (இடையில் போரிஸ் ஜான்சன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் நீக்கப்பட்டு, ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார் ). எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக எட்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். 

வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டார்மெர் கூறுகையில், ''பிரிட்டன் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்து உள்ளனர். இன்று முதல் மாற்றம் துவங்கிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

2019 தேர்தலில் மொத்தம் 15 பிரிட்டன் வாழ் இந்தியர்கள் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். இது தற்போது 107 பிரிட்டன் வாழ் இந்தியர்களாக அதிகரித்துள்ளது. மொத்தம் இருக்கும் 680 தொகுதிகளில் முதன் முறையாக அதிகளவில் இந்தியர்கள் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் இதுவரை பிரிட்டன் வாழ் இந்தியர்களில் லெய்செஸ்டர் கிழக்கில் இருந்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஷிவானி ராஜா, வேல்ஸ் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், பேர்ஹம் தொகுதியில் இருந்து சுலே பிரேவர்மன் தேர்வு செய்யபட்டுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி 300க்கும் அதிகமான இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று இருப்பதால், அந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழிலாளர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கெயிர் ஸ்டார்மெர் பிரதமாகிறார். மறுபக்கம் தங்களது தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக் ஏற்றுக் கொண்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios