ஆப்பிரிக்காவிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற மகராசி என்ற பெருமையைப் பெற இருக்கிறார் 40 வயதான மரியம் நபடான்ஸி என்ற பெண்.

இவர் உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிறார். ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் இவர்தானாம். தன்னுடைய வாழ்நாளில் 18 ஆண்டுகளை இவர் பிரசவத்திலேயே கழித்திருக்கிறார். 44 குழந்தைகளையும் ஈன்றெடுத்திருக்கிறார். இவற்றில் 6 முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 4 முறை மூன்று குழந்தைகளும் 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன். இது இல்லாமல் 8 முறை தனியாகக் குழந்தைகளைப் பிரசவித்திருக்கிறார். 

இந்த 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். இத்தனைக்கும் தினமும் குடித்துவிட்டு மனைவியை சித்திரவதை செய்யும் கணவர் மூலம் இத்தனை குழந்தைகளையும் மரியம் பெற்றிருக்கிறார் என்பதுதான் வியப்பு. விருப்பத்தோடுத்தான் குழந்தைகளை ஈன்றெடுத்தீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார். 

“என்னை 12 வயதில் 28 வருடம் மூத்தவருக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டனர். குடிகாரர் அவர். அவருடன் வாழ விருப்பம் இல்லாவிட்டாலும், குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும். அவருக்கு இன்னும் பல மனைவிகள் உள்ளனர். அவருக்கு பல்வேறு ஊர்களில் மனைவிகள் இருந்ததால், ஆண்டுக்கு ஒருமுறைதான் வந்து குடும்பம் நடத்துவார். 1994-ம் ஆண்டில் 13 வயதாகும்போது எனக்கு முதன் முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இப்படியே பல குழந்தைகள் பிறந்துவிட்டன. என் வாழ்வில் 18 ஆண்டுகளை கர்ப்பத்தோடுதான் கழித்திருக்கிறேன். என் வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் குழந்தைகள் மூலமே மகிழ்ச்சி கிடைத்தது. அதற்காகவே அதிக குழந்தைகளையும் பெற்றுக்கொண்டேன்.

 

என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன. ஆனால், நான் மட்டுமே 44 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்” என்கிறார் மரியம். பெண்கள் பிள்ளைப் பெறும் இயந்திரம் அல்ல என்று சொல்லக் கேட்டிருப்போம். இங்கே ஒரு பெண் அப்படித்தான் இருந்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் பெண்கள் எவ்வளவு மோசமாக வாழ்கிறார் என்பதற்கு மரியம் ஓர் உதாரணம்.