ஒரே சுற்றுப்பாதையில் பயணிக்கும் இரண்டு கிரகங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வலுவான ஆதாரம்!
ஒரு நட்சத்திரத்தை இரண்டு கோள்கள் ஒரே சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சாத்தியம் உள்ளது என்பதற்கு உறுதியான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி ஒரே சுற்றுப்பாதையில் இரண்டு கோள்கள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைக் கண்டுபிடிக்க சிலியின் அட்டகாமா வானியலாளர்கள் லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் வரிசையை (ALMA) விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.
பூமி இடம்பெற்றிருக்கும் சூரியக் குடும்பத்தில் இருந்து 400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள PDS 70 என்ற இளம் நட்சத்திரத்தை சுற்றி வரும் இரண்டு எக்ஸோப்ளானெட்டுகள் ஒரே சுற்றுப்பாதையை பகிர்ந்துகொள்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். PDS 70b மற்றும் PDS 70c என அழைக்கப்படும் அந்த இரண்டு கிரகங்களும் சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் போல இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் பியூட்டி பார்லர் செல்ல தடை... தாலிபான் அரசு அட்டூழியம்!
இரண்டு கிரகங்களையும் சுற்றி இருக்கும் படலத்தின் காரணமாக அவை புதிதாக உருவாகிவரும் ஒரு கிரகத்தின் பகுதிகளாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே உருவாகியுள்ள கிரகத்தின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் வானியலாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், இரண்டு கோள்கள் ஒரே சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதற்கு இதுவே வலுவான ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள்.
இதேபோன்ற உதாரணத்தை நமது சொந்த சூரிய குடும்பத்தில் வியாழன் கிரகத்தின் ட்ரோஜன் துணைக்கோள்களில் காணலாம் என்று ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் சொல்கிறது. Astronomy & Astrophysics என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.
"எங்கள் ஆராய்ச்சியானது இணை சுற்றுப்பாதையில் உள்ள கோள்களை அவற்றின் உருவாக்கத்தின் ஆரம்பத்திலேயே தேடுவதற்கான முதல் படியாகும்" என்று வானியல் விஞ்ஞான மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான நூரியா ஹூலாமோ கூறுகிறார். "இது ட்ரோஜான்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் வெவ்வேறு கிரக அமைப்புகளில் அவை எவ்வளவு உள்ளன என்பது பற்றிய புதிய கேள்விகளைத் திறக்கிறது" என்று சிலியில் உள்ள ஈ.எஸ்.ஓ. (ESO) ஆய்வகத்தின் தலைவர் இட்ஜியர் டி கிரிகோரியோ-மான்சால்வோ கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்பை முழுமையாக உறுதிப்படுத்த, குறைந்தது 2026 வரை காத்திருக்க வேண்டும் என்றும் இரண்டு கிரகங்களும் நட்சத்திரத்தைச் சுற்றி அவற்றின் சுற்றுப்பாதையில் கணிசமாக நகர்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் இது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என பால்சலோப்ரே-ருசா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
போலி வீடியோ பார்த்து வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்! மணிப்பூர் கொடூரச் சம்பவத்தின் பின்னணி இதுதான்!