குழந்தையை கடத்த வந்ததாக தவறாக கருதி, மெக்ஸிகோவில் இருவர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவி இருப்பதாக, வாட்ஸ் அப் மூலம் பொய் தகவல்கள் பரவின. இதை தொடர்ந்து, சந்தேகப்படும்படி திரிந்த வட மாநில தொழிலாளர்கள் சிலரை,  பொதுமக்கள் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். சில இடங்களில், தாக்குதலுக்கு ஆளான அப்பாவிகள் உயிரிழந்த கொடுமையும் நடந்தது. 

இதையடுத்து, பொதுமக்களுக்கு காவல்துறையினர் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சந்தேகப்படும் நபர்களை தாக்கக்கூடாது; காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் பின், இச்சம்பங்கள் சற்று குறைந்துள்ளன.

ஆனால், மெக்ஸிகோ நாட்டிலும் இதுபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அங்குள்ள பியூப்லா மாகாணத்தில், சான் வின்செண்ட் பொக்யூரன் நகரில், 21 வயது மற்றும் 53 வயதுடைய பண்ணை தொழிலாளர்கள் இருவர், சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியுள்ளனர். 

இதை பார்த்த உள்ளூர்வாசிகள் 150-க்கும் மேற்பட்டோர், குழந்தை கடத்த இருவரும் வந்துள்ளதாக கருதி, அவர்களை பிடித்து தாக்கியுள்ளனர். அத்துடன், தீ வைத்து கொளுத்தினர். தகவலறிந்து அங்கு விரைந்த உள்ளூர் காவல்துறையினர், பலத்த காயங்களுடன் இருவரும் மீட்டு, விரிவான விசாரணையை துவக்கியுள்ளனர்.