அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு கட்டுக்கடங்காமல் தொடர்வதால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க டொனால்ட் ட்ரம்ப் அரசு அவசர அனுமதி வழங்கியுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், அது டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தி உள்ளது.  இதனால் ட்ரம்ஸ் பிளாஸ்மா சிகிச்சைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டில் இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க தேர்தல் வரும் நவம்பர்-3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ட்ரம்புக்கு எதிரான பிரச்சாரம் அங்கு சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவில் அவர் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என அவருக்கு எதிரான பிரச்சாரத்தை எதிர்க்கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த வைரஸை அவர் கட்டுப்படுத்தத் தவறியதன்மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சாய்ந்துவிட்டது எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள உடனே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதில்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் உயிர் காக்கும் சிகிச்சையாக கருதப்படும் பிளாஸ்மா சிகிச்சையை முன்னெடுப்பது என ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். பிளாஸ்மாவில் சக்தி வாய்ந்த ஆன்டிபாடிகள் உள்ளன என்று நம்பப்படுகிறது, எனவே இது நோயை விரைவாக எதிர்த்துப் போராட உதவும் என்றும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதுடன், அவர்கள் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்  என்றும் நம்பப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், covid-19 லிருந்தும் அதனால் ஏற்படக் கூடிய அபாயங்களில் இருந்து பாதுகாப்பதில் பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். நியூயார்க்கில் நுரையீரல் நிபுணர் லேன் ஹொரோவிட்ஸ், பிளாஸ்மா உடலில் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இதனால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது, தொற்று நோயை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது இந்த சிகிச்சை பலன் அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக  டொனால்ட் ட்ரம்ப் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் எப்போது வெளியிடுவார் எனபதை கூன வெள்ளை மாளிகை கூற மறுத்துவிட்டது, ட்ரம்பின் செய்தித்தொடர்பாளர் கெய்ல் மெக்னி, ஜனாதிபதி ஒரு பெரிய மருத்துவ முன்னேற்றத்தை அறிவிப்பார் என கூறியுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் கூற்றுப்படி ஏற்கனவே அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு. இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இந்த சிகிச்சைக்காக நோயிலிருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து பிளாஸ்மா சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குணமடைந்தவர்களின் உடலில் உள்ள ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை எடுத்து நோயுற்றவர்களின் உடலில் செலுத்தி கொரோனாவிலிருந்து குணப்படுத்தும் சிகிச்சையாக இது நடைமுறையில் இருந்து  வருகிறது.  பல நாடுகளில் இது வெற்றி பெற்றிருந்தாலும் சில நாடுகள் அதை செயல்படுத்த தயங்குகின்றன. இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை விஞ்ஞானி டெனிஸ் இந்த சிகிச்சை ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், முழுமையாக செயல்படுத்த இன்னும் ஏராளமான புள்ளி விவரங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக முறையான கிளினிக்கல் பரிசோதனை முடிவு வரும் நாட்களில் வெளியாகும் என கூறியுள்ளார்.இந்நிலையில்  அமெரிக்க அதிபர் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளார். அதாவது வேண்டுமென்றே பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்கின்றனர், அரசியல் நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பலர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் குணமடைந் துள்ளார்கள், பலர் குணமடைந்து மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர், ஆதலால் இது தீவிரமாக ஆராயப்பட வேண்டியது அவசியம் என அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.