கொரோனா தடுப்பூசி குறித்து ட்ரம்ப் கூறும் கருத்துக்கள் நம்பத் தகுந்தவை அல்ல..!! போட்டுத்தாக்கிய கமலா ஹாரிஸ்..!
இத்தகைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்னரே தடுப்பூசியை கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியை ட்ரம்ப் அரசாங்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் தகவல்கள் நம்பத் தகுந்தவை அல்ல என ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, அதிலும் இந்த வைரசால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அந்நாட்டில் 64 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றை தடுக்க அந்நாட்டில் தடுப்பூசி ஆராய்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த தகவல்களை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தகவல் கூறி வருகிறார். இந்நிலையில் தடுப்பூசி குறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், வரும் நவம்பர் மாதத்திற்குள் அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே மக்களின் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே போல் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக மக்கள் பரிசோதனை செய்யப்படுவதே நோய் தோற்று அதிகமாக பதிவாக காரணம் என கூறி வருகிறார். மற்ற நாடுகளைவிட கொரோனா ஒழிப்பில் அமெரிக்கா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் அவர் பெருமை பாராட்டி வருகிறார். ஆனால் அவரின் கருத்து எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கொரோனா தொடர்பான பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ட்ரம்ப்பை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும், உலகிலேயே கொரோனாவார் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்றும் கூறி, ட்ரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.
கொரோனா விவகாரம் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கமலா ஹாரிஸ், கொரோனா விவகாரத்தில் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், covid-19 தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்பின் பேச்சை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொற்றுநோயை தடுக்க நிறைய அழுத்தங்களை அவர் எதிர்கொள்கிறார். இத்தகைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்னரே தடுப்பூசியை கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியை ட்ரம்ப் அரசாங்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து இந்நேரத்தில் ட்ரம்ப் எதைக் கூறினாலும் அதை நான் நம்ப மாட்டேன். தடுப்பூசியின் நம்பகத்தன்மை மற்றும் அதன் தாக்கம் பற்றி நம்பகமான இடத்திலிருந்து தகவல்கள் பெற வேண்டும். ஆனால் ட்ரம்ப்பின் வார்த்தைகளை நான் ஏற்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவால் அமெரிக்காவில் 1.88 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தவாரம் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த ஆண்டு இறுதிக்குள், அல்லது அதற்கு முன்னதாகவே கொரோனா தடுப்பூசியை அமெரிக்க தயாரிக்கும் என கூறியுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி பரிசோதனையின் ஆரம்ப முடிவுகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே வரக்கூடும் என அமெரிக்காவின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி பாசி கூறியுள்ளார். அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு இல்லை அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.