அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏழு உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தும் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால் அது நாட்டிற்கே அவமானம் என்று கூறியுள்ளார். எதுவுமே செய்யாதவர்களுக்கு பரிசு வழங்கப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஏழு உலகளாவிய போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னரும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால், அது அமெரிக்க நாட்டிற்கே ஒரு பெரிய அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

விர்ஜினியாவில் உள்ள குவாண்டிகோவில் ராணுவத் தளபதிகள் மற்றும் அட்மிரல்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், உலக நாடுகளின் போர்களுக்கு தீர்வு கண்டபோதும், எதுவுமே செய்யாத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

"யாரும் இதுவரை இப்படிச் செய்தது இல்லை. ஆனால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்குமா? நிச்சயமாகக் கிடைக்காது," என்று அவர் குறிப்பிட்டார்.

எதுவும் செய்யாதவருக்கு பரிசு கிடைக்கும்

அவர் மேலும் கூறுகையில், “எதுவுமே செய்யாத சிலருக்கு நோபல் பரிசை அவர்கள் கொடுப்பார்கள். டொனால்டு டிரம்ப் போர்களை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்தார் என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதியவருக்கு அந்தப் பரிசைக் கொடுப்பார்கள். நோபல் பரிசு ஒரு எழுத்தாளருக்குச் செல்லும்.” என்று கூறினார்.

மேலும், "சரி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஆனால், நோபல் பரிசு கிடைக்காவிட்டால், அது நம் நாட்டிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். நான் சொல்கிறேன், எனக்கு அந்தப் பரிசு வேண்டாம். அது நம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஏனென்றால் இதுபோன்ற ஒரு சாதனை இதற்கு முன் நடந்ததில்லை" என்று டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா மோதல், தனது '20 அம்ச அமைதித் திட்டத்தின்' மூலம் முடிவுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (திங்கட்கிழமை) இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அவர் தீர்த்து வைத்த மோதல்களின் எண்ணிக்கை எட்டாகும். "இது வெற்றி பெற்றால், எட்டு மாதங்களில் எட்டு மோதல்களைத் தீர்த்திருப்போம். இது மிகவும் நல்லது," என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் நோபல் பரிசு ஆசை

நோபல் அமைதிப் பரிசைப் பெறுவதற்காக அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார். காசா போர் மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அவருக்கு முக்கியமான இராஜதந்திர சவால்களாக உள்ளன.

ஆனால், பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிவரும் டிரம்ப், பல நாடுகளின் பரிந்துரைகளையும் பெற்றுள்ளார். பாகிஸ்தான், கம்போடியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்துள்ளன.

நார்வே நோபல் கமிட்டி டிசம்பரில் முடிவை அறிவிக்கவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு "இதுவே சரியான தருணம்" என்று வெள்ளை மாளிகை பகிரங்கமாக வாதிட்டு வருகிறது.